நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் அடிக்கல் நாட்டினார். அதைதொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களிடையேபேசிய முதல்வர், ``இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 7.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.
மேலும் ``கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் பேசினார். ``வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன என்றும் வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா, ரெடிமேட் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4% ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8 ஆக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாகையில் கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது 207.56 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் 43.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார். பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான சோதனைகள் நடைபெறுகின்றன. இதன்மூலம்தான் அதிக அளவில் கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பலருக்கு அறிகுறிகளே தென்படாத நிலையில், சோதனை செய்தால்தான் தொற்று இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் நானும் என்னுடன் வருபவர்களும் கொரோனா பரிசோதனை செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
வேளாண் பணிகள் 100 சதவிகிதம் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலைப் பணிகள் 100 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்த முதல்வர், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்த மாநிலமும் தமிழ்நாடுதான். ஜிடிபி சதவிகிதம் இந்திய அளவைவிட தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் எந்தவிதத்திலும் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் ஏழரை லட்சம் பேர் தங்கி பணி செய்துவந்தார்கள். அந்த அளவு தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருக்கிறது. நம் மாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது போல வெளி மாநிலத் தொழிலாளர்களையும் நாம் வேலைக்குப் பயன்படுத்தி வருகிறோம். அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்த மாநிலம் தமிழ்நாடுதான்” என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது என்ற நிலை, தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே நிலவி வருவது அனைவருக்குமே கண்கூடாக தெரிகின்றது. இருப்பினும்கூட தமிழகத்தில் அப்பிரச்னை இல்லை என முதல்வர் கூறியிருப்பதாக, சர்ச்சைக்குரிய பேச்சாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களுக்கு பிறகு, வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.