“ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதி ஏற்போம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச தாய்மொழி தினம் இன்று சூளுரைத்து உள்ளார்.
இன்றைய தினம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
அதாவது, ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி தினம் பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், “சாதி, மதத்தை கடந்து அனைவரும் ஒன்றினையும் ஒரே விஷயம் தாய் மொழி மட்டுமே” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், “இன்றைய இளைய தலைமுறையினரும் நமது தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து செயல்படும் வகையிலேயே, இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்துடன், உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகிய உயர்தனிச் செம்மொழியாம் நமது தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் பலரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு, “தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், “உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி, அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.
இதனிடையே, இன்றைய தினம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படும் நிலையில், “தமிழ்நாட்டில் தாய்மொழிவழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் நாள் எந்நாளோ?” என்று, பாமக நிறுவனர் ராமதாஸ், தனது கவலையைத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தாய் மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும், உலக தாய் மொழி நாள் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “பன்னாட்டு தாய்மொழி நாள் 23 வது ஆண்டாக இன்று கொண்டாடப் படும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி இன்னும் கனவாகவே நீடிப்பது கவலையளிக்கிறது” என்றும், தனது வேதனையை பதிவு செய்து உள்ளார்.
குறிப்பாக, “நெருக்கடி நிலை நடைமுறைக்கு வரும் வரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி தான் கோலோச்சியது என்றும், ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கும் பள்ளிகள் சென்னை பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் ஒட்டு மொத்தமாகவே 29 தான் இருந்தன என்றும், அதுவும் கூட தமிழ் தெரியாத ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் பிற மொழி பேசுபவர்களுக்காகவே நடத்தப்பட்டன” என்றும், சுட்டிக்காட்டி உள்ளார்.
“அதன் பிறகுதான், தமிழகத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் என்று தனியாகத் தொடங்கும் அளவுக்கு புற்றீசல் போன்று ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்றும், அடுத்த 45 ஆண்டுகளில் தமிழ் வழிக் கல்வி வழங்கும் பள்ளிகளை தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஆங்கிலவழிக் கல்வி வழங்கும் பள்ளிகள் பல்கிப் பெருகிவிட்டன” என்றும், தனது வேதனையை அவர் பதிவு செய்து உள்ளார்.
“எனவே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும், பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக்கும் சட்டத்தை செம்மையாக செயல்படுத்தவும், தமிழ் கட்டாயப்பாடம் என்பதை 12 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.