தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் சற்று முன்பு துவக்கி வைத்தார்.
கொரோனா வைரசின் 2 வது தொற்று இந்தியாவில் மிக வேகமாக பரவிக்கொண்டு இருக்கும் நிலையில், அதன் தாக்கம் தமிழகத்தில் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால், இந்திய அளவில் அதிகமான கொரோனா தாக்கத்தில் தமிழ்நாடு தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தும் வகையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்தார்.
அப்போது, சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, அந்த புதிய சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அத்துடன், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் உருக்காலையில் இருந்து கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆக்சிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து உருக்காலை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதே போல், முன்னதாக “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியானது வரும் 20 ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என்றும், தடுப்பூசி போடுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தொடங்கி வைத்தார்.
இதற்காக தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக 10 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்து உள்ளது. அவற்றில், 9 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகள் தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளன.
இதில், ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும், 7 லட்சத்து 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் உள்ளன.
அத்துடன், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 2 நாள் பயணமாக, 5 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அதன்படியே, இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள இரும்பாலை உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாகவே, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, கோவை கொடிசியாவிலும், குமரகுரு கல்லூரியிலும் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார். இதையடுத்து இரவு மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர், அங்கிருந்து திருச்சி மாவட்டத்திற்கும் சென்று கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார்.