சிவகங்கை சமத்துவபுர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிறுவர் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகள் விளையாட ஊஞ்சல் ஆட்டி விட்டு பார்வையிட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாள் சுற்றுப்பயணமாக மதுரைக்கு சென்று உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக, அங்கு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்புாது, அங்குள்ள சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டை வேங்கைபட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க சென்றார். அப்போது, அங்கிருந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுமியை அழைத்து, அந்த சிறுமியை வைத்தே, புதிய சமத்துவபுரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கோட்டை வேங்கைபட்டியில் கிட்டதட்ட 100 வீடுகள், அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, பூங்கா உள்ளிட்டவை என சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் சகல வசதியுடன் கூடிய இந்த புதிய சமத்துவபுரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது, அங்கிருந்த விளையாட்டு திடலை பார்வையிட்ட முதல்வர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் அருகில் சென்று, அவர்கள் இன்னும் உற்சாகமாக விளையாடும் வகையில், சிறுவர்களின் ஊஞ்சலை ஆட்டி விட்டு, சிறுவர்களை முதல்வர் மு.க ஸ்டாலின், இன்னும் உற்சாகப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள மக்களிடம் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடந்த அதிமுக ஆட்சி செயலற்ற, நிர்வாக திறமையற்ற ஆட்சி” என்று, விமர்சனம் செய்தார்.
அத்துடன், “கலைஞரைப் போல சிறந்த முதலமைச்சராக செயல்படுவதாக துனை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியதை பெரிதாக கருதுகிறேன் என்றும், கலைஞர் போல் எந்த கொம்பனாலும் இங்கு ஆட்சி செய்ய முடியாது” என்றும், பெருமிதம் கொண்டார்.
மேலும், “சாலையில் மக்கள் கையசைத்து வரவேற்று அன்பும், அரவணைப்பும் செலுத்துவது என்னை ஊக்கப்படுத்துகிறது என்றும், இப்போது மட்டுமல்ல எப்போதும் நான் இதே போல் சுறுசுறுப்புடன் செயல்படுவேன் என்றும், கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் சமத்துவப்புரத்தை திறந்து வைத்துள்ளது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டங்களில் ஒன்று இந்த சமத்துவபுரம் திட்டம்” என்றும், சுட்டிக்காட்டி பேசினார்.
குறிப்பாக, “தமிழகத்துக்கு பெரும் மதிப்பு மிக்கவர்களை வழங்கியது சிவகங்கை மண் தான் என்றும், கண்ணதாசன், பொன்னம்பல அடிகளார் போன்றவர்களை சிவகங்கை மண் தமிழ்நாட்டிற்கு தந்து உள்ளது” என்றும், அந்த மாவட்டத்தின் சிறப்புகளையும் மக்கள் முன்பு எடுத்துரைத்தார்.