திருப்பூரில் நாளை பாஜக பேரணி நடத்த உள்ளதால், பிரியாணிக்கும் - பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பெரியகடை வீதி பிரியாணி கடைகள் சங்கம் சார்பில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“இது என்னடா பிரியாணி அண்டாவுக்கு வந்த சோதனை?”
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆதரவாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, தமிழக பாஜக சார்பில் நாளை திருப்பூரில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, திருப்பூர் சிடிவி பகுதியில் தொடங்கும் இந்த பேரணியானது, அங்குள்ள பெரியகடை வீதி வழியாகச் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
இதனால், அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்கள் பீதியில் உரைந்துப்போய் உள்ளனர்.
அதற்கு காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அந்த அமைப்பினர், அந்த பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் வைத்து நடத்திய பிரியாணி கடையில் புகுந்து, அவரை தாக்கிவிட்டு பிரியாணியை, அண்டாவுடன் திருடிச் சென்றனர். இதனால், அந்த கடையின் உரிமையாளர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
இதனை கருத்தில்கொண்ட அந்த பகுதியில் உள்ள பெரியகடை வீதி பிரியாணி கடைகள் சங்கத்தினர், அங்குள்ள காவல் நிலையத்தில் நூதன புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில், “பெரியக்கடை வீதியில் ஏராளமான பிரியாணி கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இதனால், வரும் 28 ஆம் தேதி (நாளை) பெரியக்கடை வீதி வழியாக பாஜகவினர் நடத்தும் பேரணி, இந்த கடைகள் வழியாக செல்ல உள்ளதால், கடையில் உள்ள பிரியாணிக்கும், பிரியாணி அண்டாவிற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வித்தியாசமான புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இதனிடையே, திருப்பூரில் இஸ்லாமியர்கள் பகுதியில் நடைபெறும் பாஜக பேரணியில், பிரியாணி கடைக்கும் பிரியாணி அண்டாவிற்கும் பாதுகாப்பு கேட்டு பிரியாணி சங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
குறிப்பாக, இணையத்தில் பாஜக பேரணிக்கு எதிரான மீம்ஸ்களை, நெட்டிசன்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அதன்படி, “பேக்கரி, இட்லி கடை, பஜ்ஜி போண்டா கடை உரிமையாளர்கள்.. இதொ நாங்களும் வந்துட்டோம்” என்று வருவது போல் நடிகர் செந்தில் படம் போட்டு காமெடி செய்திருக்கிறார்கள்.
“இது என்னடா பிரியாணி அண்டாவுக்கு வந்த சோதனை?”