காதலன் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட கர்ப்பிணி காதலியை, அவரது காதலனுடன் போலீசாரே சேர்த்து வைத்து காவல் நிலையத்தில் திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் தான் இப்படி ஒரு காதல் திருமணம், காவல் நிலையத்திலேயே அரங்கேறி இருக்கிறது.
அதாவது, நெல்லை மாவட்டம் திசையன்விளை முருகேசபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் 29 வயதான சசிகலா என்ற இளம் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயதில் ரித்திகா என்கிற பெண் குழந்தை உள்ளது.
ஆனால், சசிகலாவின் கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால், தனது 11 வயது மகளை திருச்சியில் இருக்கும் மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, சசிகலா நெல்லையில் பத்திரம் எழுதும் தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது, அங்குள்ள திசையன்விளை இட்டமொழி ரோட்டை சேர்ந்த கட்டேரி பெருமாள் என்பவரின் மகன் 27 வயதான முத்து என்ற இளைஞனுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவிற்கு காதல் ஏற்பட்டு உள்ளது.
இதனால், அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலிக்கத் தொடங்கியது முதல், இவர்கள் இருவரும் தொடர்ந்து நெருக்கமாக பழகி தொடங்கி உள்ளனர்.
இதனால், சசிகலா தற்போது 6 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால், சசிகலாவின் வயிறும் பெரிதானது.
இந்த நிலையில் தான், காதலன் முத்து, தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுகத்திலும், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், திசையன்விளை காவல் நிலையத்திலும் காதலியான சசிகலா, புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, காபதலன் முத்து, தனது காதலியான சசிகலாவை திருமணம் செய்ய சம்மதித்த நிலையில், திடீரென்று மீண்டும் மறுத்திருக்கிறார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணியான காதலி சசிகலா, காதலன் முத்து வீட்டின் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஜமால், கர்ப்பிணியான சசிகலாவிடம் போராட்டத்தை கைவிட்டு காவல் நிலையம் வருமாறு அழைத்து உள்ளார்.
அதன்படி, நேற்று காலை மீண்டும் இரு தரப்பையும் அழைத்து போலீசார் பேசிய நிலையில், காதலன் தரப்பில் திருமணத்திற்கு மறுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பான புகார், காவல் கண்காணிப்பாளருக்கு பறந்த நிலையில், அவரது உத்தரவின் பேரில் போலீசார் மீண்டும் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த காதலன், சசிகலாவை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக காவல் நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் காதலர்கள் இருவருக்கும், போலீசாரே திருமணம் செய்து வைத்து அசத்தினர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.