“தமிழ் தாத்தா திருவள்ளுவரைப் புரோகிதர் போல் சித்தரித்து சிபிஎஸ்சி பாடத்தில் இடம் பெற்றுள்ளதாக” கவிபேரரசு வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தஞ்சையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

“திருவள்ளுவருக்கும், எனக்கும் பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள்” என்று, நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அதிரடியாகப் பேசினார்.

“ஆனால் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்” என்று, ரஜினி பேசியது இணையத்தில் பெரும் வைரலானது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் புகைப்படத்துக்குக் காவி உடை அணிவித்து, புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.

அதன் பின்பு, கடந்த 2020 ஆம் ஆண்டில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, துணை குடியரசுத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை” பகிர்ந்திருந்தார். இதற்கு, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, அந்த புகைப்படம் அப்படியே நீக்கப்பட்டது.

அதே போல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில்” இருந்து நீக்கப்பட்டன.

“கல்வியைக் காவிமயமாக்கும் போக்கினால், மாற்றுச் சிந்தனைகளே இடம் பெறக்கூடாது என்கிற எதேச்சதிகாரப் போக்குடன், புகழ் பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தை மூன்றாண்டுகள் கழித்து நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று, திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரிந்துகட்டி நின்றன.

அத்துடன், “திருக்குறளுக்குப் பதில் பகவத் கீதையைத் திணித்து தமிழ் மொழிக்குத் துரோகம் செய்யும் பா.க வின் காவிமயக் கல்விக்கேற்றபடி அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா வழியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.பிச்சுமணியும் துணை போகிறாரா?” என்று, திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், “கல்வித்துறையா? காவித்துறையா?” என்றும், அருந்ததி ராய் புத்தகம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆ.ராசா கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில், “திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து ஆரிய அவதாரம் பூசி திருவள்ளுவரை இந்து மதத்திற்குள் அடக்க மத்திய அரசு முயல்வதாக” தெரிவித்து, தஞ்சை ரயில் நிலையம் அருகே இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தின் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

மேலும், “பிரதமர் மோடி ஒரு புறம் திருக்குறளை மேற்கோள் காட்டியும், மறு புறம் திருவள்ளுவரை இந்து மதத்திற்குள் அடக்க முயற்சிப்பதாக” மாணவர் அமைப்பினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

அத்துடன், “உடனடியாக இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இல்லை என்றால், இந்தியா முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்றும், போராட்டத்தின் போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக, “சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும்” என்றும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதேபோல், கவிபேரரசு வைரமுத்துவும் இது தொடர்பாகத் தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அதில், “உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொது மனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்.” என்று #Thiruvalluvar #திருவள்ளுவர் #தமிழ் ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி வைரமுத்து தனது அழுத்தமான கருத்தினை பதிவு செய்து உள்ளார். வைரமுத்துவின் இந்த அழுத்தமான கருத்து, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.