திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான வானமாமலை பெருமாள் கோவிலில் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் பின்பற்றாமல் பெருமாள் வீதி உலா நடைபெற்றுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பெருமாள் கோவிலில் இன்று பத்தாம் திருவிழாவையொட்டி தேர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தேரில் பெருமாளை வைத்து வீதி உலா திருவிழாவை அந்த ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் முகக்கவசம் அணியாமல், திருவிழாவை கொண்டாடினர். ஊர் மக்கள் மொத்தமாக கூடி நின்று திருவிழாவை நடத்தியுள்ளனர். காவல்துறையினரும் கூட்டத்தை கலைக்க முடியாமல் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.

இந்த திருவிழாவின் காட்சிகளை சமூக வலைதளங்களில் பலர் பதிவேற்றம் செய்து, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், இந்த திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தினரால் மேலும் கொரோனா வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.