சென்னையில் மாநகர பேருந்துகளுக்கு பாதிப்பில்லை என்றும் பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது எனவும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரு தினங்களாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர், இன்று மூன்றாவது நாளாக சென்னை கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை மந்தைவெளி மற்றும் பட்டினப்பாக்கம் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு உடன் இருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது : "சென்னையில் பொழியும் பெருமழையால் மாநகரப் பேருந்துகளுக்கு பாதிப்பில்லை என்றும் பொதுமக்களுக்கு தேவையான பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருவதாகவும் சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் மீட்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்" தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது தற்போது 17,576 பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக எந்தவித போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு முழுமையாக பூர்த்தி செய்து வருகிறது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். மேலும் சென்னையை நோக்கி வருபவர்களுக்கு பேருந்துகள் தயாராக உள்ளது. அத்தியாவசிய தேவை காரணமாக சென்னையை நோக்கி வருபவர்களுக்கு போக்குவரத்து தடையின்றி கிடைக்கிறது என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்