டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்தியக்குழு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் சுற்றுச் சூழல்களை பொறுத்தவரையில், பருவ மழைக் காலம் வந்துவிட்டாலே, பருவக்கால நோய்களும் இங்கு வரிசை கட்டத் தொடங்கி விடும்.
அதில், பிரதானமானவையாக இருப்பது டெங்கு காய்ச்சல் தான்.
இவற்றுடன், மழை காலங்களில் டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சலும் வரிசை கட்டி நிற்பது கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளாக இருக்கின்றன.
இவற்றில், டைபாய்டு, மலேரியா காய்ச்சலை காட்டிலும் டெங்கு காய்ச்சலே வீரியம் மிக்கதான் திகழக்கிறது. டெங்குவை யாரும் சரியாக கவனிக்காமல் விட்டால், அது உயிருக்கே பெரும் பிரச்சனையாகி விடும்.
அதே போல், டெங்குவுக்கான பிரத்யேகமான தடுப்பூசி கண்டறியப்படவில்லை என்பதும், இதன் பின்னடைவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு டெங்கு பரவல் மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வகையில் சற்று முன்பாக கன மழை பெய்து வந்த ஹரியானா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீருக்கும் மத்தியக்குழு விரைந்து இருக்கிறது.
இதில், பிற மாநிலங்களைவிடவும் டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. அங்கு, தினமும் 25 பேர்களாவது டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாகவே, வட கிழக்கு பருவ மழை வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பரவ தொடங்கி உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்து உள்ளது.
இதனால், கொரோனா காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சலை மத்திய அரசு தற்போது கையில் எடுத்து உள்ளது.
நேற்று இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, டெங்கு அதிகமாக உள்ள மேற்கண்ட மாநிலங்களில் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், அந்த ஆலோசனை கூட்டத்தின் போது, “டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்மாறு” அவர், அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அந்த வகையில் தான், தமிழ்நாட்டை உலுக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு தற்போது விரைந்துள்ளது.
இதனிடையே, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் டெங்கு பரவல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உள்ள நிலையில், நாடு முழுவதும் பதிவான டெங்கு பாதிப்பில் 86 சதவீதம் இந்த 9 மாநிலங்களிலேயே பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.