தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

“தமிழ் மெல்ல அழிந்து வருகிறது என்ற வாசகம்” கடந்த சில ஆண்டுகளாக நம் காதுகளில் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு எதிர்மறையாகத் தமிழை யாராலும் அழிக்க முடியாது என்ற வாசகமும், உறக்க எழுந்தது. இதனால், தமிழுக்கு ஆதரவான குரல்கள் தொடர்ந்து எழுந்தது.

அதே நேரத்தில் தமிழைக் காக்க ஒரு சிற்சில கூட்டம் படையெடுத்துப் புறப்பட்டது. அந்த கூட்டங்கள் எல்லாம் தமிழைக் காக்கும் நோக்கில் தமிழ் சார்ந்தும், மண் சார்ந்தும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

எனினும், கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றிருக்கும் தமிழகத்தில், தமிழ் வழி பயில்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்துகொண்டு வருவது வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

வசதி படைத்த வர்க்கமெல்லாம் ஆங்கில மோகத்தில், ஆங்கில வழி கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கத் தொடங்கிய நிலையில், ஏழை எளிய மக்கள் தான், தமிழ் வழியில் பயின்று, கொடி காத்த குமரனாய் தமிழ் கொடியை நட்டு வைத்து அழகு பார்த்து வருகிறார்கள்.

அதே நேரத்தில், தமிழ் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டன. ஆனால், தமிழ் படித்தால், அது சார்ந்து கிடைக்கக்கூடிய வேலைகள் குறித்தும், நன்மைகள் குறித்தும் செய்திகளும், பதிவுகளும் தொடர்ந்து இணையத்தில் உற்சாக தீ மூட்டின.

ஆனாலும், தமிழ் படிப்போர் எண்ணிக்கை முன்பை ஒப்பிடும்போது, தற்போது அது முற்றிலும் குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இதனால், தமிழ் வளர்ச்சியைப் போற்றி பாதுகாக்கும் நோக்கிலும், தமிழ் படிப்போரை இன்னும் உற்சாகப்படுத்தும் நோக்கிலும், “தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்” என்று, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் முதுகலை / முது அறிவியல் பட்டப்படிப்புகளான (தமிழ், வரலாறு, தொல்லியல், மொழியியல், மெய்யியல், முதுநிலை நிகழ்த்துக்கலை, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பான தமிழ், வரலாறு முதுநிலைப் பட்டயம், சான்றிதழ் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், ஐந்தாண்டு முதுகலைப் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விரும்பினால் இளநிலைப் பட்டம் பெற்றுக்கொள்ளலாம்” என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முதுகலைத் தமிழ் பயிலும் 20 மாணவர்களுக்கும் ஒருங்கிணைந்த முதுகலைத் தமிழ் (ஐந்தாண்டு) பயிலும் 25 மாணவர்களுக்கும் சிறப்பு உதவித் தொகையாகத் தமிழக அரசு உதவியுடன் மாதந்தோறும் 2000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்றும், இது கல்வி உதவித்தொகை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது” என்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, “இந்த ஆண்டு முதல் மாணவ சேர்க்கை இணைய வழியாகவும் நடைபெறுகிறது. மாணவர்கள் WWW/tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை இணைய வழியாக நிறைவு செய்து அனுப்பலாம்” என்றும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.