தஞ்சை பாலியல் வழக்கில், அரசியல் தலைவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அழகிகளின் போட்டோஸ் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தஞ்சையில் “தினமும் 5 ஆண்களிடம் படுக்க சொல்லி டார்ச்சர் செய்வார்கள்” என்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்த வழக்கில், தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட 4 பேரை, வல்லம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட பிரபாகரன், சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இந்தவழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பயன்படுத்திய 4 கார்கள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 பேரும் பயன்படுத்திய செல்பொன்கள் மற்றும் ஒரு டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, செந்தில்குமார் - ராஜம் தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அந்த டைரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் குறித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

மேலும், செந்தில்குமார் மனைவி ராஜம் செல்போனை பரிசோதித்ததில், தஞ்சாவூரைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு இளம் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்தும் தற்போது முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அத்துடன், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அரசு காப்பகத்தில், மிகுந்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, தஞ்சை பாலியல் வழக்கில், அரசியல் தலைவர்களின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அழகிகளின் போட்டோஸ் அனுப்பப்பட்டுள்ள விவகாரம், அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.