“எங்களுக்கு ஜாதி, மதம் ஏதுமில்லை” என்று, மதுரை ஆதீனத்துக்கு தக்க பதிலடி தரும் வகையில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது மதுரையில் பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது, “சினிமாவில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகர் விஜய்யின் படங்களை பார்க்காதீர்கள்” என்று, மதுரை ஆதீனம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தடாலடியாக பேசியது இணையத்தில் பெரும் வைரலானது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத்தின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பிலான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மதுரை ஆதீனம், “கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்ப்பதன் காரணமாக, என்னை சங்கி என்று சொல்கிறார்கள் என்றும், திரைப்படத்தில் இந்துக்களை அவமதிக்கும் விதத்தில் பேசிய நடிகர் விஜயின் படங்களை யாரும் பார்க்காதீர்கள்” என்றும், ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார்.
இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தார்கள். இது குறித்து, சமூக வலைத்தளங்களில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான், “நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம்” என்று கூறிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக, அவருக்கு தக்க பதிலடி தரும் வகையில், விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி உயுள்ளனர்.
அதன்படி படி, மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மதுரை மாநகர் பகுதிகளின் பெரும்பாலன இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.
அந்த போஸ்டரில், “எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?” என்று, வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
மேலும், “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை” என்றும், பகிரங்கமாகவே விஜய் மீதான அன்பை ரசிகர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக, “தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்றும், அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.
இதனிடையே, மதுரை ஆதீனம் சமீப காலமாக தமிழக அரசுக்கு எதிராக பேசி வரும் கருத்துக்கள் யாவும், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய் குறித்து தெரிவித்த கருத்தும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி, அதற்கு விஜய் ரசிகர்களும், மதுரை ஆதீனத்தை வஞ்சம் தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.