“நீட் தேர்வு தொடர்ந்தால் சமூகநீதி இருக்காது என்றும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் கூட இல்லாத சூழல் ஏற்படும்” என்று, ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதனால், “நீட் தேர்வால் கிராமப் புற மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
முக்கியமாக, தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் தான், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த நிலையில், நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.
“160 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர்” என்பது குறித்தும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
இப்படியாக, “நீட் தாக்கம் குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையானது, இணைய தளத்தில் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், “நீட் தேர்வைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கையை எடுக்கத் தொடங்கலாம்” என்று, ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.
“நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வதற்காகத் தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம்” என்றும், அதில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
“நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும் என்றும், மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “அரசியல் சாசன சரத்துகள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் உரிமையைத் தருகிறது என்றும், அல்லது அந்தச் சட்டத்திற்கு நிகரான ஒரு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றலாம்” என்றும், ஆலோசனை வழங்கி உள்ளது.
“தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையை +2 மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று ஏகே ராஜன் குழு தனது அறிக்கையில்” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் நீட் மூலம் மருத்துவ சேர்க்கை நடத்தப்பட்டால் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும், முக்கியமாக இன்னும் சில காலத்தில் தமிழகத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் கூட இல்லாத சூழல் ஏற்படும் அபாயம் நிகழும்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “நீட்டை ரத்து செய்தால் சமூக நீதி நிலைநாட்டப்படும்” என்றும், ஏகே ராஜன் குழு, தனது அறிக்கையில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 85,000 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டு, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.