சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள சிறிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
மாண்புமிக அம்மாவின் அரசு, கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும், முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்திழைப்பையும் நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டு நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்கார்க்களிலும், தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் ஆகஸ்ட் 10 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாவட்ட ஆட்சி தலைவரிடம் பெற வேண்டும்.
அரசு வெளியிடும் நிலையான வழிகாட்ட் நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகஸ்ட் 10 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்குவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
அறிக்கை வெளியிட்டதை போலவே, மற்றொரு பக்கம் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேரடியாக ஆராய, இன்று சேலம் சென்றுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. அப்படி சென்றவர், சேலத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ``பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும். கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.மாநகராட்சிகளிலும் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்களை சந்தித்த அவர், ``முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டாவில் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் நெரிசலை குறைப்பதற்காக பல பாலங்கள் கட்டப் பட்டுள்ளது என்று கூறிய அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது
கல்வியைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பது தமிழக அரசின் கொள்கை. கல்விக் கொள்கை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு அளிக்கும் பரிந்துரைக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர் அல்லாத முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் ரூ.25 லட்சமாக அரசு அதிகரித்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.
எஸ்.வி.சேகர் மற்றும் அவரின் விமர்சனங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது, ``அவர் பாரதிய ஜனதாவுக்கே பிரச்சாரம் செய்ய வரவில்லை. பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவே வராத எஸ்.வி.சேகர் ஏன் கட்சியில் இருக்க வேண்டும்?. மேலும் எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை" என கூறியுள்ளார்