தமிழ் மீது அப்படி ஒரு தீராத ஆசையால், தமிழகம் வந்து தமிழ் பயிலும் போலந்து நாட்டு இளைஞர் ஒருவர், தமிழ் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மொழி எவ்வளவு பழம் பெருமை வாய்ந்தது, எவ்வளவு அற்புதங்கள் மிகுந்த ஒரு மொழி என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக வந்திருக்கிறார் போலந்து நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் இளைஞர் ஒருவர்.
போலந்து நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் வோய்தேக் என்ற இளைஞர், அந்நாட்டின் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச். படிப்பு படித்து முடித்து இருக்கிறார். தன்னுடைய படிப்பை முடித்த நிலையில், போலந்து நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க முடிவு செய்து உள்ளார்.
அதன்படி, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிற்கு வருகை தந்த போலந்து நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் வோய்தேக், கோவை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் பயின்று வந்தார். அவர் தமிழ் பயின்று 7 மாதங்கள் ஆன நிலையில், தற்போது 29 வயதான வோய்தேக், மிக அற்புதமாகத் தமிழ் பேசி கலக்கி வருகிறார். அதுவும் மிகவும் சரளமாக அவர் தமிழ் பேசி அசத்தி வருகிறார்.
இந்த 7 மாத காலத்தில், தமிழ் மீது இருந்த தீராத காதலால், தனது கடின உழைப்பைப் பயன்படுத்தி தமிழில் மிக சரளமாக எழுதவும், பேசவும் செய்கிறார் போலந்து நாட்டு இளைஞர் வோய்தேக்,
இந்நிலையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்களான சுரேஷ் மற்றும் பெண் தோழி ஒருவருடன் கன்னியாகுமரிக்கு வருகை அந்த போலந்து நாட்டு இளைஞர் வோய்தேக், அங்குள்ள காந்தி மண்டபத்திற்கு வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், கன்னியாகுமரியில் உள்ள திருமவள்ளூவர் சிலையையும் சுற்றிப் பார்த்தார். அத்துடன், கன்னியாகுமரியில் தமிழ் சார்ந்து இருக்கும் அனைத்து விசயங்களைப் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டார்.
தமிழ் மீது இருக்கும் தீராத காதல் குறித்து பேசிய வோய்தேக், “எங்கள் நாட்டில் இருக்கும் பள்ளி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவே, முறைப்படி தமிழ் கற்றுக்கொள்ள நான், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோவை வந்தேன்’ என்று, குறிப்பிட்டார்.
“இந்த 7 மாத காலத்தில், நான் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவும், மிக நன்றாகவும் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன் என்றும், விரைவில் போலாந்து நாட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு தமிழ் சார்ந்த எனது பணிகளை மேற்கொள்வேன்” என்றும் கூறினார்.
முக்கியமாக, “எனக்கு தமிழ் மீதும், மகாத்மா காந்தி மீதம் உள்ள அன்பின் மிகுதியால், தற்போது கன்னியாகுமரி வந்து, இங்குள்ள விசயங்களை நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்” என்றும், குறிப்பிட்டார்.
குறிப்பாக, “எனக்குத் தமிழ் நாட்டு பெண்களை மிகவும் பிடிக்கும்” என்று கூறிய வோய்தேக், “இங்குள்ள தமிழ் பெண்களைத் திருமணம் செய்ய விரும்புவதாகவும், எதிர் காலத்தில் என் விருப்பம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன்” என்றும், தெரிவித்தார்.
அதே போல், தமிழகத்தில் உள்ள உணவு முறைகளான இட்லி, தோசை, பொங்கல் போன்ற உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், போலாந்து நாட்டு இளைஞர் வோய்தேக் கூறினார்.
இதனிடையே, போலாந்து நாட்டு இளைஞர் வோய்தேக்கின் இந்த தமிழ் ஆர்வம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.