தமிழகத்தில் மதக்கலவரங்களை தடுக்க மாவட்டந்தோறும் தமிழக அரசு குழு அமைத்து புரட்சி செய்துள்ள நிலையில், அந்த குழுவின் முக்கிய செயல்பாடுகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்கள் மாநாடு தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மாவட்டங்கள் தோறும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, முதலமைச்சர் அனைவரிடமும் கேட்டறிந்தார். இந்த மாநாடு இறுதியில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவித்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று, சூளுரைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, தனது உரையின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதன் படி, “தமிழ்நாட்டில் மதக்கலவரங்களை தடுப்பதற்கு, கோவையில் இருப்பது போன்ற தனி குழு, மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த 3 நாட்கள் மாநாடு முடிவடைந்த நிலையில், தமிழக அரசு அறிவித்த இந்த மதக்கலவர தடுப்புக் குழு பற்றிய புரிதல் அவசியம் என்கிற குரலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளன.
அதன் படி, கடந்த 1997 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கலவரம், அதன் தொடர்ச்சியாக 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்வங்களைத் தொடர்ந்து, கோவையில் மதக்கலவர தடுப்பு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில், காவல் ஆணையர் தவிர, உதவி ஆணையர், 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், அலுவலக பணிக்கு 5 பேர், களத்தில் பணிபுரிபவர்கள். இப்படியாக, மொத்தமாக 15 பேர் என மொத்தம் 25 பேர் முதல் 27 பேர் வரை இக்குழுவில் இருப்பார்கள் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.
அத்துடன், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் செயல்பட்டின் போது, களத்தில் பெரும்பாலும் தலைமை காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் அளவிலான அலுவலர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பான புலனாய்வில் கிடைக்கும் தகவல்களை, இக்குழுவினர் நேரடியாக காவல் ஆணையருக்கு தெரியப்படுத்துவார்கள் என்றும், இவர்கள் சாதாரண உடையிலேயே மக்களோடு மக்களாக இருந்து கண்காணிப்பை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக, இந்த போலீசார் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நேரடியாக கலந்து கொள்ளாமல் இருந்தாலும், அதனை முன் கூட்டியே கணித்து சொல்ல வேண்டிய பொறுப்பும் இந்த போலீசாருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே போல், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், அதனையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய முழு பொறுப்பும் இந்த குழுவிற்கு கூடுதலாக சேர்ந்து உள்ளது.
குறிப்பாக, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு பிரிவும், மத கலவரங்களை கண்காணிக்கும் குழுவும் உள்ளது என்றாலும் கூட, அவற்றில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே நபர்கள் இருப்பார்கள் என்றும், தகவல்கள் கூறப்படுகிறது.
மிக முக்கியமாக, முதலமைச்சரின் இந்த புதிய அறிவிப்பு என்பது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் தோறும் இந்த குழுவை பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம், “தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை, வாட மாநிலங்களைப் போன்று, தமிழகத்தில் மத கலவரங்களாக மாற்ற முயற்சிகள் நடந்த நிலையில் தான், “தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை” என்று, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி தெரிவித்து, இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே, இனி யாரும் மத கலவரங்களை தமிழகத்தில் தூண்ட முடியாது அளவில், மாவட்டந்தோறும் குழு அமைத்து தமிழக அரசு புரட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.