தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சார்பாக, அந்தந்த கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், யார் யார் என்னென்ன கருத்துக்களை கூறினார்கள் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்..
சபாநாயகர் அப்பாவு
“உயர் மட்ட குழுவின் அறிக்கையை ஆளுநர் ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார். நீட் தேர்வு முறையானது. நீட் தேர்வு விலக்கு கோரியதற்கு ஆளுநர் அளித்த பதில் கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா? அப்படி வெளியிடலாமா?” என்றும், சபாநாயகர் கேள்வி எழுப்பி உள்ளார். அப்படி, பொதுவெளியில் வெளியிட்ட உரியவர்கள் என்ணி உணர வேண்டும். ஏனெனில், பேரவையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமுன்முடிவு, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு மறு ஆலோசனைக்கு உட்படுகிறது என்கையில் அது பொதுவெளிக்கு அனுப்பப்படாது.
மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சர்
“நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை தமிழக ஆளுநர் முற்றிலுமாக அவமதித்துவிட்டார். “நீட் விலக்கு மசோதா மீதான ஆளுநரின் கருத்து தவறானது. இது ஏ.கே.ராஜன் குழுவை அவமானப்படுத்துவதாக உள்ளது. நீட் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களை எதிர்மறையாக பாதித்துள்ளது. இது பள்ளிக்கூட பயிற்று முறையை ஊக்குவிக்காமல் தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. அரசியல சட்ட அமைப்பில் எந்த சட்டத்தையும் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு. அதை தடுப்பது அரசியல் சட்டததையே கேள்விக்குள்ளாக்குகிறது” ” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்
“நீட் விலக்கு மசோதாவை தமிழக வாழ்வுரிமை கட்சி முழுவதும் ஆதரிக்கிறது. நீட் இந்த மண்ணில் இருந்தே விலக்கப்பட்ட வேண்டும். ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். அரியலூர் அனிதா தொடங்கி 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். ஏழை மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது” என்றும், வேல்முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.
ஜெகன்மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சி
“7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும்” என்று, வலியுறுத்தி உள்ளார்.
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி
“மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்ற இயக்கத்தை முதல்வர் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் மாநில உரிமைகள் பறிக்கப்படாது. தமிழக அரசுப் பள்ளிக்கு இணையாக உத்தரப் பிரதேச அரசுப் பள்ளிகளை ஒப்பிட முடியுமா?” என்றும், கேள்வி எழுப்பினார். “நீட் என்ற அரக்கனை ஒழிப்போம்” என்றும், அவர் முழுங்கினார்.
நாகை மாலி, சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவர்
“பொது பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து சட்டமன்றம் மசோதாவை நிறைவேற்றினால், அதை ஆளுநர் ஒன்றிய அரசுக்குதான் அனுப்ப வேண்டும். அதன் மீது கருத்து சொல்லவோ, அதை திருப்பி அனுப்பவோ கூடாது” என்று, விமர்சித்து உள்ளார்.
ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
“கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 8 கோடி மக்களின் ஒருமித்த கருத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றும், ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் கட்சி
“நீட் தேர்வு சமூக நீதிக்கு மட்டுமல்ல, இயற்கை நீதிக்கே எதிரானது. நீட் தேர்வு என்பது ஒரு போட்டித் தேர்வு, தமிழ் வழியில் பாடங்களை படித்தவர்கள் எப்படி தேர்வு பெற முடியும்? நீட் தேர்வுக்கு எதிரான முதலமைச்சரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பின் நிற்கிறது. இந்த தேர்விலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும். விசிக சார்பில் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்கிறேன்”” என்றும், பாலாஜி கூறியுள்ளார்.
சதன் திருமலைக்குமார், மதிமுக
“நீட் விலக்கு மசோதாவுக்கு மதிமுக வரவேற்பு அளிக்கிறது. நீட் விலக்கு மசோதாவை நிராகரித்ததற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்கதல்ல. மருத்துவம் என்பது சமூக நீதி தொடர்புடையது. நாட்டில் குடியரசுத் தலைவருக்கு என்ன உயர் சிகிச்சை கிடைக்கிறதோ, அது சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளார்.
எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பாமக
“தமிழ்நாட்டில் 2022-2023 மாணவர் சேர்க்கைக்கு முன்னரே தமிழக அரசின் மூலம் நீட் ரத்து செய்யப்பட வேண்டும். பாமக சார்பில் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்கிறேன்” என்று, கூறியுள்ளார்.
ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட்
“சமூக நீதியை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். சமூக நீதியின் ஆணிவேரில் நீட் தேர்வு என்ற வெந்நீரை மத்திய அரசு ஊற்றுகிறது” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் குழுத்தலைவர்
“புகழ்பெற்ற மருத்துவர்கள் நீட்டா எழுதினார்கள்?. குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஆளுநரின் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. ஆளுநரின் குறிப்பு தமிழக மக்களை மிகவும் வேதனைபடுத்தி இருக்கிறது” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.
விஜயபாஸ்கர், அதிமுக
“அரசு பள்ளி மாணவர்கள் நலனுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்தியது அதிமுக. பின் தங்கிய மாணவர்களின் நலனுக்காக நாம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை 2 வது முறையாக நிறைவேற்றி உள்ளோம். எந்த சூழலிலும் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து அதிமுக தடம் மாறாது. நீட் விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவோம்” என்று, கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர், அதிமுக
“நீட் விலக்கு மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தருகிறது. நீட் விவகாரத்தில் வரலாற்றை மறைத்துவிட்டு யாரும் பேசக் கூடாது. நீட் விவகாரத்தில் அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டது” என்றும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.