தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தன. அதே நேரத்தில், உலகின் சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2 ஆம் அலையாக இன்று வரை வீசிக்கொண்டும் இருக்கிறது. ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாகப் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தன.

இதனால், தமிழகம் உட்பட இந்தியாவின் பல இடங்களிலும் இயல்பு நிலை மெல்லத் திரும்பிக்கொண்டு இருந்தன. இதன் காரணமாக, பொது மக்களுக்கு பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு நின்று களம் கண்டு வருகின்றன. முக்கியமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் பொதுக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில் தான், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரித்துக் காணப்பட்டு உள்ளது.

அதன் படி, கடந்த 26 ஆம் தேதி ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அத்துடன், அதற்கு முந்தைய 2 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இவற்றில், அதிக பட்சமாகச் சென்னையில் 180 பேர் கொரோனாவுக்கு தற்போது பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சேர்த்து மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருந்தனர்.

அது வேளையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில் தான், தமிழகத்தில் மார்ச் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் பொது முடக்கம் போடப்பட்ட நிலையில், அதன் பிறகு பல கட்ட தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமாக நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.