தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், மேலும் பல புதிய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் வரும் நாளை நள்ளிரவு 12 மணி வரை பொது ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு தற்போது மேலும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதன் படி, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிக்கையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.

- தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

- நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

- மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

- கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

- டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

- நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலாத் தலங்களுக்கு பொது மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் நடைமுறைகள் தொடர்கிறது.

- நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தமிழகத்தில் உள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுது போக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடத்தவும் அனுமதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- தமிழகத்தில் கூட்டங்கள் நடத்த காவல் துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் நீச்சல் குளங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடையும் தொடர்கிறது.