“தினமும் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?” என்று, முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றன. இதனால், ஒவ்வொரு கட்சிகளும், அதன் எதிரி கட்சிகள் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, பரப்புரையை மேற்கொண்டார். அப்போது, பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “விவசாயிகளுக்கான திட்டங்களைக் கவனமாக செயல்படுத்தி வருவதாக” குறிப்பிட்டார்.

“நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னுதரமானமாக திகழ்வதாகவும், பவானி ஆற்றில் 7 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளதாகவும்” அவர் கூறினார்.

முக்கியமாக, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் சபை கூட்டம் நடத்துவதால், எந்த பலனும் இல்லை” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, மக்களிடம் வாங்கிய மனுக்களில், எத்தனை பிரச்சினைகளுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டார்?” என்றும், முதலமைச்சர் கேள்வி
எழுப்பினார்.

குறிப்பாக, “டெண்டர் நடக்காத பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக, அமைச்சர்கள் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டி வருவதாகவும், ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளன என்றும், இது தொடர்பான விசாரணைக்குச் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

மேலும், “அரசு மீது வேண்டுமென்றே திமுகவினர் பழி சுமத்துகின்றனர் என்றும், ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் மீது வழக்குகள் உள்ளன என்றும், தீர்ப்பு வரும் போது அவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்” என்றும், முதல்வர் பழனிசாமி சூளுரைத்தார்.

முக்கியமாக, “தினமும் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?” என்றும், முதலமைச்சர் பழனிசாமி ஆவேசமாக பேசி பகிரங்கமாக சவால் விடுத்தார்.

அத்துடன், “தேர்தலுக்காக மக்களைக் கவரும் நோக்கில் திமுகவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பார்கள் என்றும், ஆனால் எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்” என்றும், முதலமைச்சர் மிக கடுமையாக விமர்சித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை” என்றும், அப்போது, அவர் சுட்டிக்காட்டிப் பேசினார். அது நேரத்தில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் மற்றும் 5 அமைச்சர்களின் சொந்த தொகுதிகளைக் குறிவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்த உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக அமைச்சர்களின் தொகுதிகளைக் குறிவைத்து திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவை, கரூர், ஈரோடு, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார்.

இந்த நிலையில் தான், இன்று காலை அமைச்சர் கே.பி.அன்பழகனின் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியிலும், மாலையில் முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் மக்கள் கிராம சபை நடைபெற உள்ளது. மேலும் 8 ஆம் தேதி காலையில் அமைச்சர் தங்கமணியின் குமாரபாளையம் தொகுதியிலும், அன்று மாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியிலும் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று, திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், வரும் 9 ஆம் தேதி காலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியிலும், அன்று மாலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதியிலும், அடுத்த நாள் 10 ஆம் தேதி காலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் ராயபுரம் தொகுதியிலும் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.