“காற்று மாசின் பேராபத்தால் வட இந்தியர்கள் தங்களில் வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை இழக்கிறார்கள் என்றும், இது சென்னை போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை” என்றும், AQLI நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, இந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இழக்க நேரிடும்” என்று, Air Quality Life Index என்ற AQLI நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
அதே போல், “இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் காற்றில் நுண்துகள்களின் பெருக்கம் அபாயகரமான அளவுகளில் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள 480 மில்லியன் மக்கள் உலகத்தில் பிற இடங்களில் இருப்பதைக் காட்டிலும், 10 மடங்கு அதிக மாசடைந்த காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்றும், வட இந்திய மாநிலங்கள் மட்டுமல்லாமல் தற்பொழுது மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களும் தற்பொழுது நுண்துகள் காற்று மாசின் பேராபத்தால் தங்களது வாழ்நாளில் 2.2 முதல் 2.9 வருடங்களை அவர்கள் இழக்கிறார்கள்” என்றும், AQLI நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, “இது நுண்துகள் அளவுகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படும் சென்னை போன்ற தமிழக நகரங்களுக்கும் சேர்த்தே இந்த ஆயுள் குறைப்பு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாகவும்” AQLI நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
அதாவது, இந்திய காற்று தர நிர்ணய அளவீட்டின் படி, “காற்றில் நுண்துகளின் அளவு 60 µg/m3 க்கு உள்ளாக இருக்க” வேண்டும்.
ஆனால், “உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) காற்று தர நிர்ணய அளவீட்டின் படி 25 µg/m3 க்கு உள்ளாக இருக்க” வேண்டும்.
ஆனால், சென்னையின் பல பகுதிகளில் நுண் துகளின் அளவு 60 µg/m3 அளவை விட அதிகமாக உள்ளதாக Health Energy Initiative நடத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது.
மிக முக்கியமாக, சென்னையில் உள்ள மிக முக்கிய பகுதிகளான “திருவொற்றியூர், காசிமேடு, மீஞ்சூர், கொடுங்கையூர், வல்லூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி, ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வின் பொழுது நுண்துகள் 60 µg/m3 முதல் 128 µg/m3 வரை இருப்பது” தெரிய வந்திருக்கிறது.
மேலும், “பாரிமுனை, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நுண்துகளில் அளவு 176 µg/m3 முதல் 228 µg/m3 வரை பதிவாகி இருப்பதும்” தற்போது தெரிய வந்திருக்கிறது.
“சென்னையின் காற்றின் தரம் இப்படி மிக மோசமாக இருக்கையில், நுண்துகளின் அளவை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 25 µg/m3 அளவுக்குக் குறைத்தால், தற்பொழுது இருப்பதை விட மனித ஆயுளை 5 ஆண்டுகள் அதிகரிக்கலாம்” என்றும், AQLI அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அத்துடன், இதன் சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ள அந்த நிறுவனம், “சீனாவின் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கைகள் நமக்கான பதிலாக நிற்கின்றன என்றும், கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கி காற்று மாசை சீன அரசு தீவிரமாகக் கட்டுப்படுத்தியதன் விளைவாகத் தற்பொழுது 29 சதவீதம் வரை நுண்துகளைக் கட்டுப்படுத்தி உள்ளதாகவும்” மேற்கொள் காட்டியுள்ளன.
இதே போல, இந்தியாவும் அனல் மின் நிலையங்கள் மற்றும் வாகனப் புகை ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருமானால் இந்திய மக்களின் ஆயுட்காலமும் 5 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும்” என்றும், புதிய ஆசையை அந்த நிறுவனம் காட்டி உள்ளது.
மிக முக்கியமாக, இந்தியாவின் மின் கொள்கை புதைப்படிம எரிசக்தியிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மாறுவது தற்போதைய அவசரத் தேவையாக உள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் காற்றின் தரத்தை உயர்த்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.