“தமிழ்நாட்டிற்கு உள் அனுமதிச்சீட்டுமுறை கொண்டு வந்து, வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்” என்று, தமிழ்த்தேசியப் பேரியக்கம் மீண்டும் போர் கொடி தூக்கி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.கே.எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலையில் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர். கடந்த 6.4.2022 அன்றிரவு அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியானார்.
இதனைத் தொடர்ந்து, இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஒன்றுகூடினர். தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில், ரூபாய் 12 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இதனை ஏற்காமல் இறந்த தொழிலாளியின் உடலை எடுக்க விடாமல் வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்த வந்த காவல் துறையினர் மீதும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்” என்று, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
அத்துடன், “தாக்குதலுக்கு அஞ்சி காவல் துறையினர் அங்கிருந்த காவலாளி அறையில் பதுங்கிய போது, அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று, அங்கிருந்த கண்ணாடிகளையும் பொருட்களையும் உடைத்த வட மாநிலத்தவரின் கும்பல் வன்முறை, காண்போரைப் பதறச் செய்கிறது. இத்தாக்குதலில், காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட 7 பேருக்குக் காயம் ஏற்பட்டது. பின்னர், சிறப்பு அதிரடிப்படையினர் வந்த பிறகு, தாக்குதலில் ஈடுபட்ட 40 வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றும், குறிப்பிட்டு கூறியுள்ளது.
அத்துடன், “இந்த விபத்தில் உயிரிழந்த சக தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு வடமாநிலத்தவர்கள் நிர்வாகத்தினரிடம் முறையிட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், 12 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தும், அதை உடனே அந்த நள்ளிரவிலேயே தாருங்கள் என கும்பலாக சூழ்ந்து கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபட்டதும், வன்முறையில் ஈடுபட்டதும் ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும், “எப்பொழுதும் எந்தவொரு ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல், மனம்போன போக்கில் திமிரோடு கும்பலாகச் சுற்றும் மனநிலை வடமாநிலத்தவர்களுக்குக் கூடுதலாக உள்ளது. குறைகூலித் தொழிலாளிகளாக இங்கு வந்தாலும், தான் இந்திய ஆளும் இனத்தைச் சேர்ந்தவன், தனது இந்தி மொழி இந்நாட்டின் ஆளும் மொழியாக உள்ளது, தமிழர்கள் இந்திய அரசின் - இந்தியின் கீழ் அடிமைகளாக உள்ளனர் என்ற பொதுப்புத்தி அவர்களிடம் நிறைந்து கிடக்கிறது. எனவே, கும்பலாகச் சென்று அவர்கள் வன்முறையில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டுவதில்லை.
தமிழ்நாட்டில், வடமாநிலத்தவர்கள் இது போன்று வன்முறையில் ஈடுபடுவது புதிதல்ல! கடந்த பிப்ரவரி 20 ல், பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசு நகரப் பேருந்து நடத்துனரை பேருந்திலிருந்து தள்ளிவிட்டு வட மாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பூர், அவிநாசி, கோவை, அம்பத்தூர், கிண்டி, திருப்பெரும்புதூர் போன்ற பல இடங்களில் தமிழ்த் தொழிலாளிகளை இந்தித் தொழிலாளிகள் தாக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
இது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத்தவர்கள் இங்கு கொள்ளை - கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, எளிதாகத் தப்பிச் சென்று தங்கள் சொந்த மாநிலத்தில் பதுங்கிக் கொள்வதும் அவ்வப்போது நடக்கிறது. இதன் காரணமாக, பல வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக்கூட முடிவதில்லை” என்றும், மேற்கொள் காட்டப்பட்டு உள்ளது.
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் போன்றவற்றை மார்வாடிகள் - குசராத்திகள் போன்ற மேலடுக்கு வடமாநிலத்தவர்கள் முழுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்ட நிலையில், தற்போது கீழ்மட்டப் பணிகள் தொடங்கி ஐ.டி. வேலை வாய்ப்புகள் வரை இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உள்ளது.
மண்ணின் மக்களான தமிழர்களோ, தங்கள் சொந்த மண்ணிலேயே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பெருமளவில் குடியேறிவரும் வடமாநிலத்தவர்கள், வடநாட்டு இந்தி ஆதிக்கக் கட்சிகளின் வாக்கு வங்கியாகவும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அடியாட்களாகவும் திரள்கிறார்கள். திருப்பூரில் சி.ஏ.ஏ. சட்டத்திருத்தத்தை ஆதரித்து இந்து முன்னணியினர் 2019 டிசம்பரில் நடத்திய பேரணியில், பல்லாயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பங்கேற்றது தமிழ்நாட்டுக்குப் பெரும் எச்சரிக்கை விடுக்கும் செய்தியாகும்” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
“பாஜக போன்ற கட்சிகள் வட மாநிலத்தவர் அதிகமுள்ள பகுதிகளிலேயே மார்வாடிகளின் துணையோடு காலூன்றி நிற்பது தெரிந்தும், வட மாநிலத்தவர்களை இங்கேயே நிரந்தரப்படுத்த வேண்டுமெனக் கோருவது, பாட்டாளி வர்க்கப் பார்வையும் இல்லை. அவர்கள் தொழிலாளர்களின் ஊதியத்தைத் தாழ்த்துவதிலும், போராடிப் பெற்ற சலுகைகளை சீர்குலைப்பதிலும் முக்கியக் காரணியாக இருக்கிறார்கள்.
மார்வாடிகளின் மிகை நுழைவு, தமிழ்நாட்டுத் தொழில் முனைவோரையும் வணிகர்களையும் பொருளியல் களத்திலிருந்து விரட்டுகிறது.
இவற்றைவிட, வெளியாரின் மிகை நுழைவு நமது நிலங்கள் பறிபோவதற்கும், மக்கள் தொகையில் இனச்சமநிலை சீர்குலைவதற்கும் வழிவகுக்கிறது. தமிழர் தாயகத்திற்கு அச்சுறுத்தலாகிறது” என்றும், கவலையுடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“எனவே, கட்டுக்கடங்காமல் தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவருக்கு இனியாவது வரம்புகட்டித் தடுப்பதே இன்றைய தேவையாகும்” என்றும், வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்காகத் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
“ - தமிழ்நாடு - மாநிலமாக அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1 க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்று.
- தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டை வழங்காதே!
- நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறை (Inner Line Permit System) கொண்டு வா!
இப்படியான, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஈரோடு - வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது” என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தெரிவித்து உள்ளது.