“T20 World cup போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியாவை நாங்கள் காப்பாற்றி உள்ளோம்” என்று பேசி, இந்திய ரசிகர்களை மீண்டும் சீண்டிப் பார்த்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி தனது பெற்றி பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், அந்த அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழலில் தான், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்று உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அடுத்த பெரிய அணியான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதனால், இரு அணிகளுக்குமே இந்த போட்டி வாழ்வா? சாவா? என்று பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தான், “இந்திய அணி அரை இறுதியில் நுழைய, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி தோற்க வேண்டிய தேவை இருந்தது என்று” பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கிண்டல் அடித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து கூறிய ஷோயப் அக்தர், “நியூசிலாந்துக்கு வாழ்த்துக்கள். பாகிஸ்தானில் ஆடாமல் புறக்கணித்தீர்கள் இங்கு சேஃப் ஆக இருக்கிறீர்களா?” என்று, கிண்டல் நிறைந்த நக்கல் அடித்து உள்ளார்.
அத்துடன், “மைதானத்தில் கூட உங்கள் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு படையினரை நாங்கள் அனுப்பியிருப்போம். ஆனால், நாங்கள் மறந்து போய் விட்டோம். ஏனென்றால், மைதானத்தில் கூட நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்றும், கடுமையாகவே ஷோயப் அக்தர் கிண்டல் அடித்துள்ளார்.
அத்துடன், “ஒரு மாறுதலுக்காக இந்தியாவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்தனர் என்றும், அதற்குக் காரணம், நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் தோற்றிருந்தால், நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி விட்டால், அது இந்திய அணிக்குப் பெரிய சிக்கல் தான்” என்றும் கூறியுள்ளார்.
“எனவே, நாங்கள் உங்களைக் காப்பாற்றி இருக்கிறோம் இந்தியா” என்றும், ஷோயப் அக்தர் இந்திய ரசிகர்களை நோகடிக்கும் வகையில் கிண்டல் அடித்து உள்ளார்.
“நாங்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கு வருவதை விரும்புகிறோம் என்றும், இறுதிப் போட்டியிலும் இந்தியாவைச் சந்திக்க தயாராகவே இருக்கிறோம்” என்றும், அக்தர் கூறியுள்ளார்.
இதனிடையே, கிரிக்கெட் போட்டி விவாதத்தின் போது, நேரடி டி.வி.யில் நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அவமானப்படுத்தப்பட்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்ட சம்பவத்தில், அக்தருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து கூறியிருந்த நிலையில், அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தாத அக்தர் இந்திய ரசிகர்களைச் சீண்டும் விதமாகப் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.