தென்னிந்தியாவின் மிகவும் செல்வாக்கான அரசியல்வாதிகளில் ஒருவரான தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். அந்தக் கார் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.
சென்னை சாலைகளில் தனது கான்வாய்க்கு நடுவில் வெள்ளை நிற லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி பயணிப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. சொகுசு மற்றும் ஆடம்பர வாகன பிரியர்களின் முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
எனினும் மு.க. ஸ்டாலின் பயன்படுத்தும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் 5 கதவுகள் கொண்ட பதிப்பாகும். லேண்ட் ரோவர் டிஃபென்டர் எனும் பெயரில் இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெரிய மற்றும் பிரீமியம் தர எஸ்.யூ.வி. வாகனங்கள் பிடித்தமானவை எனக் கூறப்படுகிறது.
மு.க. ஸ்டாலினிடம் வெள்ளை நிற லேண்ட் ரோவர், ரேஞ்ஜ் ரோவர் மற்றும் கருப்பு நிற லெக்சஸ் எல்எக்ஸ் 470 ஆகிய கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மு.க. ஸ்டாலின் போன்று தென்னிந்திய அரசியல்வாதிகள் பலர் வாகன பிரியர்களாக இருக்கின்றனர்.
மு.க. ஸ்டாலினின் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்டது. ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு விதமான சாலைகளையும் அசால்டாக சமாளிக்கும். மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கினாலும்கூட பெரியளவில் அதனால் ஏற்படும் அசௌகரியமான உணர்வு காருக்குள் இருக்கும் பயணிகளுக்கு தெரியாது. இதற்கேற்ப வடிவமைப்பை இந்தக் கார் பெற்றிருக்கின்றது.
இதற்காக அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், அடாப்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரடு, முரடான சாலையைப் போலவே 900 மி.மீ. ஆழம் வரையிலான நீர் நிலைகளைக் கூட இந்தக் கார் அசால்டாக கடந்துவிடும் வசதியைப் பெற்றிருக்கின்றது. இதுபோன்ற பன்முக நிலப்பரப்புகளை சமாளிக்கும் விதமாக டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் -2 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இத்துடன் மிக அதிக சொகுசான இருக்கைகள் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ஓட்டுநர் இருக்கை, ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் இந்தக்காரில் கொடுக்கப்பட்டு உள்ளன.
லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார்கள் 3 எஞ்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதில் இரண்டு பெட்ரோல் மூலம் இயங்கும். மற்றொரு வகை டீசலிலிர் இயங்கும். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 296 பி.எச்.பி. மற்றும் 400 என்.எம். டார்க் திறனை வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து இந்த திறனை வெளியேற்றுகின்றது.
இத்துடன் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்விலும் இந்தக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் மோட்டார் 400 பி.எஸ். பவரை வெளியேற்றும். இதேபோல் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வும் டிஃபென்டரில் வழங்கப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 300 பி.எஸ். பவர் வரை வெளியேற்றும்.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் 3 கதவு பதிப்பு மற்றும் 5 கதவு பதிப்பு என இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது. 3 கதவு பதிப்பு கொண்ட டிஃபென்டர் 90 ஒப்பீட்டளவில் அதன் சிறிய அளவு மற்றும் தனித்துவமான 3 கதவு தோற்றத்திற்காக விரும்பப்படுகிறது. 3 கதவு பதிப்பின் தனித்தன்மையை விட நடைமுறையை அதிகம் விரும்கிறவர்கள் 5 கதவு பதிப்பு கொண்ட டிஃபென்டர் 110-ஐ தேர்ந்தெடுக்கின்றனர்.
லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் ரூ. 86.24 லட்சம் தொடங்கி ரூ. 1.22 கோடி வரையிலான உச்சபட்ச விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இத்தகைய உச்ச விலைக் கொண்ட காரிலேயே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது தனது பயணங்களை மேற்கொண்டு வருகின்றார்.
நடிகரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் சிவப்பு நிறத்திலான லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 கார் மாடலை சமீபத்தில் வாங்கினார். இந்த காருக்கு முன்னதாக விஜய் வசந்த் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை பயன்படுத்தி வந்தார். இதனை புதுப்பிக்கும் வகையில் அதிக விலைக் கொண்ட டிஃபென்டர் 110 மாடல் காரை விஜய் வசந்த் தற்போது வாங்கியுள்ளார்.
இந்தியாவில் இந்த விலையுயர்ந்த காரை இன்னும் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். பாலிவுட் திரை பிரபலங்களான ஆயுஷ் ஷர்மா மற்றும் அர்ஜூன் கபூர், தொழிலதிபரான முகேஷ் அம்பானி என பலர் இந்தக்காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.