நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்படங்களில் தனது நடிப்பில் மட்டும் கருணை காட்டாமல், நிஜ வாழ்விலும் கருணை உள்ளத்தோடு பல ஆயிரம் ஏழை மாணவர்களை நடிகர் சூர்யா படிக்க வைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா பேசி அறிக்கை வெளியிட்டது கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் வைரலானது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

அதே நேரத்தில், பாஜகவை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே சூர்யாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், அந்த சர்ச்சை அப்படியே அடங்கியது.தற்போது “சூரரைப்போற்று” படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் சூர்யா, அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” இயக்குநர் ஹரியுடன் “அருவா” ஆகிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், திரைப்பட படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாகத் தொடங்கப்படாத நிலையில், நடிகர் சூர்யா எந்தவித படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி 2 வது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்து உள்ளார். அந்த வெடிகுண்டு, “இன்னும் சற்று நேரத்தில் வெடித்துச் சிதறப்போவதாகவும்” மர்ம நபர் எச்சரிக்கை விடுத்த உடனேயே, அவர் போனை வைத்து விட்டார்.

இதனால், பதறிப்போன போலீசார், நடிகர் சூர்யாவின் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனிக்கு சென்று உள்ளனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அந்த அலுவலகம் பூட்டப்பட்டு இருந்துள்ளது.

குறிப்பாக, ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனியில் செயல்பட்டு வந்த நடிகர் சூர்யாவின் அலுவலகமானது, தற்போது அடையாறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இதனால், இந்த குறிப்பிட்ட அலுவலகத்தில் தற்போது ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருவதும் போலீசாருக்கு தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, பூட்டிக்கிடந்த அந்த அலுவலகத்தைத் திறந்து போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். ஆனால், அங்கு எந்த வித வெடிகுண்டும் சிக்க வில்லை. அது வெறும் புரளி என்று பின்னர் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான புவனேஷ்வர் என்ற இளைஞர் தான், இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, 28 வயதான புவனேஷ்வரை மரக்காணம் காவல் துறையினரின் உதவியுடன் சென்னை போலீசார் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “இவர் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்றவர்” என்பதும் விசாரணையில் போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட 28 வயதான புவனேஷ்வரை சென்னைக்கு அழைத்து வந்த தேனாம்பேட்டை போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.