நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண், சினிமா பாணியில் விபத்தைப் போன்று படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில், அமெரிக்காவில் திட்டமிட்டு
தமிழகத்தில் அவரது கணவன் அரங்கேற்றியது தெரிய வந்தது.

திருவாரூர் மாவட்டம் கிடாரங் கொண்டான் பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண், நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவர்.

இதனிடையே, ஜெயபாரதிக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அங்குள்ள தப்பளாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம்
நடைபெற்றுள்ளது.

கணவன் விஷ்ணு பிரகாஷ், அமெரிக்காவில் வேலைபார்த்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு, ஜெயபாரதியும் தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி, சண்டை தொடர்ந்து

நடைபெற்றுக்கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயபாரதி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.

இப்படியாக, அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயபாரதி, தனது சொந்த ஊரிலேயே தற்காலிகமாக அஞ்சல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

இப்படியான நிலையில், ஜெயபாரதி எப்போதும் போல வேலை பார்த்து விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, ஏடிஎம்மில் பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பான விசாரணையில், ஜெயபாரதியை திட்டமிட்டு சரக்கு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டதாக ஆதாரத்துடன் அவரது சகோதரர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, நடிகர் சந்தானத்தின் உதவியால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்துக்கு இந்த வழக்கு சென்றது. இதனால், அவர் மறுவி சாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது இந்த வழக்கு, விபத்து அல்ல என்பதும், திட்டமிடப்பட்ட படுகொலை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.

அதாவது, படுகொலை செய்யப்பட்ட ஜெயபாரதி, கணவர் விஷ்ணு பிறகாசைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவர் விஷ்ணு பிரகாசுக்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், விஷ்ணு பிரகாஷ் பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, தனது மனைவி ஜெயபாரதியை அவரது கணவர் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.

அதன் படி, விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்தாலும், ஊரில் உள்ள தனது உறவினர்களான ராஜா, ஜெகன், செந்தில் குமார் ஆகியோருடன் சேர்ந்து மனைவி ஜெயபாரதியை கொல்ல திட்டம் தீட்டி உள்ளார். அதன் படி, சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால் விபத்து என்று வழக்கை முடித்து விடுவார்கள் என்ற முடிவுக்கு அவர் வந்து உள்ளனர். அப்படி, திட்டமிட்டபடியே, செந்தில் குமார் என்பவர், பழைய சரக்கு வேன் ஒன்றை 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார். வாகனத்திற்கு டிரைவராக பிரசன்னா என்பவர் சென்று உள்ளார்.

இந்த வாகனம் ஒரு நாள் முழுவதும் ஜெயபாரதியைத் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது. அப்படி, கடந்த 21 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலையில் வேலைக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து அந்த வாகனம் சென்று உள்ளது. அதன் பிறகு, அவர் எப்போது, எந்த வழியாக வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து, திட்டமிட்டே, இந்த விபத்தை ஏற்படுத்தி அவர்கள் ஜெயபாரதியை கொன்றது தெரிய வந்தது.

இந்த கொடூர கொலைக்கு அமெரிக்காவில் இருந்தபடியே திட்டம் தீட்டிக் கொடுத்த ஜெயபாரதியின் கணவர் விஷ்ணு பிரகாஷ் சில லட்சம் பணத்தை
அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படுவதால், அது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விஷ்ணு பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா,ஜெகன், செந்தில் குமார் ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு, தற்போது தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், அமெரிக்காவில் உள்ள விஷ்ணு பிரகாஷை, இந்தியத் தூதரகம் மூலமாகத் தமிழகம் அழைத்து வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.