திருமணம் செய்துகொண்டு போலீஸ் எஸ்.ஐ. தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட திருநங்கையைப் புகார் அளித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் போலீஸ் எஸ்.ஐ.யாக இருந்த விஜய சண்முகநாதன், திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரத்தைச் சேர்ந்த திருநங்கை பபிதா ரோஸ்சை, கடந்த ஜனவரி மாதம் விரும்பி திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
விஜய சண்முகநாதன் - பபிதா ரோஸ் திருமணமானது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஒரு கோயிலில் நடைபெற்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து, விஜய சண்முகநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, அவருக்குக் குழந்தைகள் இருப்பது திருநங்கை பபிதாவுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பபிதா கேட்டபோது, இவர்கள் இருவருக்குள் சண்டை வந்து பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாகத் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளிக்க வந்த திருநங்கை பபிதா ரோஸ், “அம்பாசமுத்திரம் போலீஸ் எஸ்.ஐ.யாக இருந்த விஜய சண்முகநாதன், தன்னை காதலிப்பதாகக் கூறி, என்னை மாற்றி திருமணம் செய்துகொண்டார்” என்று புகார் அளித்துள்ளார்.
மேலும், “தன்னிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும், ஒரு கிலோ அளவிலான தங்கத்தையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டார்” என்றும் குற்றம்சாட்டி உள்ளார். “சில மாதங்கள் கடந்த பிறகே, அவருக்குத் திருமணம் ஆனது தனக்குத் தெரியவந்ததாகவும்” கூறிய அவர், “தன்னிடம் உள்ள பணம் மற்றும் நகைகள் எல்லாம் அவரிடம் கொடுத்தபிறகு தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும்” புகார் கூறி உள்ளார்.
இதனால் “விஜய சண்முகநாதன், அவரது குடும்பத்தினருடனே வாழட்டும் என்றும், ஆனால் தன்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தையும், நகைகளையும் மீட்டுத் தர வேண்டும்” என்றும், புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட விஜய சண்முகநாதன், நீலகிரி மாவட்டத்திற்கு தற்போது பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுள்ளார். இதனிடையே, போலீசார் மீது, திருநங்கை ஒருவர் மோசடி புகார் கூறியுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.