சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் பயந்து போய் அலறியடித்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கினர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இரண்டு ரயில்களும் ஒரே திசையில் சென்று கொண்டிருந்தன. அப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் பெரம்பூர் ரயில் நிலையம் தாண்டியதும் மாநில கல்லூரி மாணவர்கள் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதனால் பொறுமையிழந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து கீழே இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து அரக்கோணம் சென்ற மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் மாநில கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். பதிலுக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்க முற்பட்டனர். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்பியம் போலீசார் மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரை சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்லூரிக்கும் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்கு பின் மாநிலக் கல்லூரி 15 மாணவர்களை பெரம்பூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே பெரும் பரபரப்பு காணப்பட்டது.