கோவையில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் ஒருவரின் 17 வயது மகள், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், இரண்டு பெயர்கள் மற்றும் ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு 'அவர்களைச் சும்மா விடக்கூடாது' என எழுதப்பட்டு இருந்தது.
இதையடுத்து காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்தான் முன்னாள் படித்த வந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவி கடந்த ஆண்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மூடப்பட்டதால், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
அப்போது, ஆன்லைன் வகுப்பில் மாணவியிடம் இயற்பியல் ஆசிரியர் மிதுன்சக்கரவர்த்தி(35) என்பவர் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதை மாணவி பயத்தின் காரணமாக வெளியே சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் நேரடி வகுப்பு தொடங்கியதும், ஆசிரியரின் பாலியல் தொல்லை மாணவிக்கு அதிகரித்ததாக தெரிகிறது.
மேலும் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை பள்ளிக்கு அழைத்து, மிதுன்சக்கரவர்த்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதன் பின்னர் கொரோனா 2-வது அலை முடிந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு மாணவி செல்லும்போதும், இந்த பாலியல் தொல்லை தொடர்ந்து உள்ளது.
இது பற்றி மாணவி, தனது ஆண் நண்பரிடம் கூறி அழுதுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் மாணவி, பெற்றோரிடம் தனக்கு பள்ளி பிடிக்கவில்லை என்று கூறி அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கினார். தொடர்ந்து அந்த மாணவி அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பை தொடர்ந்தார். ஆனாலும், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல் தொந்தரவு தொடர்ந்தது.
இதனால் மனவேதனையடைந்த பள்ளி மாணவி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மகளிர் காவல்துறையினர், போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர், நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆசிரியரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த காவல்துறையினர், ஆசிரியருக்கு உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் ஆசிரியரை அடைத்தனர்.
மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னால் எழுதியுள்ள கடிதத்தை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை எனவும், அந்த கடிதத்தில் 3 பேரை மாணவி குறிப்பிட்டு உள்ளதாகவும், ஆசிரியர் மற்றும் மற்றவர்களை காவல்துறையினர் காப்பாற்ற முயல்வதாகவும், மாணவியின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையே, மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சக மாணவர்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை கைது செய்ய வேண்டும் என்ற குற்றச்சாட்டை வைத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள், சக நண்பர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்த உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
மேலும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்றும் மாணவர்கள் கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.