வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளையும் 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று பிற்பகல் 12 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது.
வங்கக்கடலில் உருவாகிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காலைதான் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் அறிவித்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கன மழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: ‘வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யும்.
செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.