வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த போது எதிரே வந்த தம்பதிகளை வாழ்த்தினார்.

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வதற்காக துறைமுகம்,ராயபுரம், ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளுக்கு சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். பல இடங்களில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் அவர்களை படகுகள் மூலம் மீட்டனர். சாலை போக்குவரத்து பல இடங்களில் முடங்கியுள்ளது. துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர், கொடுங்கையூர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் முகாம்கள், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இதேபோல் சென்னை பெரம்பூர் பாரதி நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு ஆய்வு கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று திருமணம் முடித்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த மணமக்கள் கௌரிசங்கர்- மஹாலக்‌ஷ்மி தம்பதியினர் மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். முதல்வர் ஆய்வு செய்வதை பார்த்த மணமக்கள் கொட்டும் மழைக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் வந்தனர் . புதுமணத் தம்பதிகளைக் கண்டதும், அவர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனால், திருமணத்தன்று இன்ப அதிர்ச்சி அடைந்த மணமக்கள், முதல்வரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். யாருமே எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வினால், அங்கிருந்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கு சுமார் 10 நிமிடங்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களின் ஆசைக்கு இணங்க புகைப்படம் எடுத்துக்கொண்டு, தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு எதிர்பாராமல் கிடைத்த இந்த மகிழ்ச்சி, திருமண வீட்டினரை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. முதல்வரின் ஆசி பெற்றது அந்த பகுதியில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.