இதிகாசங்களில் வரும் இராவணன் குறித்த ஆய்வை இலங்கை அரசு தற்போது தொடங்கி உள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமானது “இராமாயணம்” கதைகள். இந்த, கதையில் வரும் நாயகன் ராமன் தன் மனைவி சீதையுடன் வனவாசம் சென்றிருக்கும் போது, சீதையில் அழகில் மயங்கிய இலங்கை அரசன் இராவணன், அவளைத் திட்டமிட்டுத் தூங்கிச் சென்று சிறை வைத்ததாக குற்றத்திற்காக, அவன் ராமனால் வதம் செய்யப்படுவதுமாக, அந்த “இராமாயணம்” முடியும். இந்த கதை முழுக்க முழுக்க நீதியை நிலை நிறுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.
இந்த கதையில் வரும் இராவணன், யாரும் எதிர்த்துப் போரிட முடியாத அளவுக்கு பேராற்றால் பெற்றிருந்ததாகவும், அவனின் வீரம் மற்றும் அறிவு ஆற்றலால் எல்லோரும் அவரை 10 தலை இராவணன் என்று தான் அழைப்பார்கள் என்று இதிகாசங்கள் கூறுகின்றன.
மேலும், இராமாயணத்தில் ராமனின் மனைவி மீது ஆசை கொண்ட ஒரு தவறான கதாபாத்திரமாக இராவணன் காட்டப்பட்டிருப்பதால், இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு இராவணன், ஒரு அரக்கன் போன்றும், வில்லன் போன்றுமே போதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.
அதே நேரத்தில், இலங்கையின் அரசனாக இருந்த இராவணன், நிச்சயம் ஒரு ஆக சிறந்த அரசனாகவும், விமானியாகவும், மிகப் பெரிய ஆளுமை மிக்க தலைவனாகவும், இலங்கையில் வாழ் மக்களின் எண்ணங்களில் அவர் எப்போதும் வாழ்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அப்படி மாபெரும் வீரத்துடன் இலங்கையை ஆண்ட இராவணன் பற்றிய ஆராய்ச்சியை இலங்கை அரசு தற்போது தொடங்கி உள்ளது.
இது குறித்து, “இராவணன் பற்றிய சாதனைகள் குறித்தும், தொல்பொருள் தகவல்கள், குறிப்புகள் என தங்களிடம் பாதுகாப்பாக உள்ள தகவல்கள், பொருட்கள் மற்றும் விரிவான விவரங்களைப் பகிருமாறு” இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இலங்கை சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அரசர் இராவணன் தொடர்பான எந்தவொரு ஆவணங்களையும் புத்தகங்களையும் அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
“அரசர் இராவணன், உலகின் முதல் விமானப் போக்குவரத்தை நிறுவியவர் என்றும், குறிப்பாக சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர் விமானத்தை இயக்கியவர் என்றும் இலங்கை அரசு நம்புவதாகவும்” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இலங்கையின் சிவில் ஏவியேஷன் ஆணையம், பண்டைய காலத்தில் அவர் பயன்படுத்திய வழி முறைகளை புரிந்துகொள்ளும் முயற்சியாக இந்த ஆய்வைப் பார்ப்பதாகவும்” இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டு மிகப் பெரிய சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக அமைந்துள்ள கட்டூ நாயக்கவில் சிவில் விமான நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புவியியலாளர்கள் அடங்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில், இராவணன் முதன் முதலில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறந்து வந்துவிட்டு, மீண்டும் திரும்பிச் சென்றதாகவும் அந்த மாநாட்டில் பேசப்பட்டது.
குறிப்பாக, அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலரும், “ராமனின் மனைவி சீதையை இராவணன் கடத்தியதாகக் கூறப்படும் இந்தியக் கதைகளை” ஏற்க மறுத்துவிட்டனர்.
அத்துடன், இராவணன் ஒரு சிறந்த அரசன் என்றும், அவர் மிகச் சிறந்த ஆட்சியாளர் என்றும், மாநாட்டில் கலந்துகொண்ட பலரும் வலியுறுத்தினர்.இதன் காரணமாக, இராவணனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இலங்கையில் பலருக்கும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இராவணன் பற்றிய ஆராய்ச்சியை அந்நாடு தற்போது தொடங்கி உள்ளது.
இராவணன் மீது உள்ள அதீத ஆர்வத்தால், சமீபத்தில் தனது விண்வெளி அறிவியல் பிரவேசத்தில் இராவணன் என்ற செயற்கைக்கோளை இலங்கை அரசு விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக இலங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்கே, “இராவணன் ஒரு விமான முன்னோடி என்பதையும், விமானத்தைப் பயன்படுத்தி முதன் முதலில் பறந்தவர் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறினார்.
மேலும், “மன்னன் இராவணன் ஒரு சிறந்த மேதை என்றும், அவர் ஒரு விமானியா? என்பதையும், அது உண்மை என்பதையும் ஒரு விரிவான ஆராய்ச்சியின் மூலமாக, அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிரூபிப்போம்” என்றும், சஷி தனதுங்கே தெரிவித்தார்.