சீர்காழி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டு வாசலில் கோலமிடும்போது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் கள்ளக் காதலுக்குத் தடையாக இருந்ததாலேயே, அந்த பெண் ஹவுஸ் ஓனர் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்து உள்ள தென்பாதி திருவள்ளுவர் நகர் 2 வது தெருவில் வசித்து வந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த ஜோதி என்பவரின் மனைவி 49 வயது சித்திரா என்ற பெண், கடந்த 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணி அளவில் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சித்திராவை தலையில் அடித்து கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், சித்ராவிற்குத் தலை சிதறிய நிலையில்,சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, பக்கத்து வீட்டுப் பெண்கள் அதிகாலை நேரத்தில் கோலம் போட வரும் போது, சித்ரா ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து, அங்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “சித்ரா, நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், சித்ரா வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசாருக்கு துப்பு கிடைத்தது.

அதாவது, சித்ரா வீட்டில் பிருந்தா என்ற பெண் வாடகைக்குத் தங்கி இருந்தார். அப்போது, அவரது வீட்டுக்கு சையது ரியாசுதீன் என்பவர், அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால், சந்தேகப்பட்ட போலீசார் சையது ரியாசுதீனையும் நேரில் வர வைத்து தீவிரமாக விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் கொலை செய்திருக்கிறார் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.

சையது ரியாசுதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மகள் பிருந்தா, திருமணத்திற்கு முன்பு கணினி பயிற்சி மேற்கொண்டிருந்த போது சையது ரியாசுதீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, பிருந்தாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் பிருந்தாவின் தந்தை குணசேகரனுடன், சையது ரியாசுதீன் இணைந்து கட்டுமான தொழில் செய்து வந்தார்.

குறிப்பாக, திருமணமான அடுத்த 5 மாத்தில் பிருந்தாவின் கணவர் செல்வகுமார் வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, பிருந்தாவுடன், சையது ரியாசுதீனுக்கு மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், சையது ரியாசுதீன் அடிக்கடி பிருந்தா வீட்டிற்கு வந்து அவருடன் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த விசயம் பிருந்தா குடியிருக்கும் பெண் ஹவுஸ் ஓனர் சித்ராவிற்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பிருந்தாவையும், கள்ளக் காதலன் சையது ரியாசுதீனையும் எச்சரித்து உள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் அதை மதிக்காமல் கள்ளக் காதல் இன்பத்தைத் தொடர்ந்து உள்ளனர்.

இதன் காரணமாக, “இனி என் வீட்டிற்கு நீ வரக்கூடாது என்று, சையது ரியாசுதீனைப் பார்த்து, பெண் ஹவுஸ் ஓனர் சித்ரா கூறியுள்ளார். இதனால், தங்கள் கள்ளக் காதலுக்கு ஹவுஸ் ஓனர் சித்ரா தடையாக இருப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய சையது ரியாசுதீன் முடிவு செய்தார். அதன்படி தான், கடந்த 18 ஆம் தேதி அதிகாலையில் ஹவுஸ் ஓனர் சித்ரா, தன் வீட்டு வாசலில் கோலம் போட வரும்போது, அங்கு மறைந்து நின்ற சையது ரியாசுதீன் இரும்பு பை்பால் அடித்து கொலை செய்தார்” என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து. கள்ளக் காதலன் சையது ரியாசுதீன் மற்றும் பிருந்தாவையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.