உடுமலை சங்கர் ஆணவக் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை சங்கர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், 2 பேரும் இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இந்த கொடூர சம்பவத்தில்,சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம், அங்கிருந்த ஒரு கடையின் சிசிடிவியில் பதிவாகி இணையத்தில் வெளியானது. இந்த சிசிடிவி காட்சிகளில், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அத்துடன், இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், கவுசல்யாவின் தந்தை தரப்பில் மரண தண்டனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, உடுமலை சங்கர் கொலை வழக்கில் தந்தையின் விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என பாதிக்கப்பட்ட கவுசல்யா தற்போது தெரிவித்துள்ளார்.