வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவே திண்டாடும் நிலையில், தனிப்பெரும் முதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது, கடும் கண்டனத்திற்கு உரிய செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனோ பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், நாட்டு மக்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டில் முடங்கிக் கிடக்கையில், 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருப்பது, நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது” என்று குற்றம்சாட்டி உள்ளார்.
“நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதமும், இந்திய ரூபாயின் மதிப்பும் பன்மடங்கு சரிந்து இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதாள வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது என்றும், பணவீக்கமும் விலைவாசியும் நாள்தோறும் உயர்கையில் அதனைச் சரி செய்வதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
“பண மதிப்பிழப்பு எனும் மிகத் தவறான முடிவும், சரக்கு மற்றும் சேவை வரி எனும் பிழையான வரி விதிப்புக் கொள்கையும், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பிளந்து சிறு, குறு தொழில்கள் யாவற்றையும் நலிவடையச் செய்திருக்கும் சூழலில், அவர்களைக் கை தூக்கிவிட்டு மேலெழச் செய்ய முயற்சியெடுக்காத மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத் துடிப்பது வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்” என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.
“பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இயலாது மத்திய ரிசர்வ் வங்கியிலுள்ள ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியிருப்பைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் பொருளாதார நிலையிலுள்ள மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க முன்வராது அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டிய தேவையென்ன?” என்றும், சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
“வங்கிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து திவாலாகிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடனை சத்தமின்றித் தள்ளுபடி செய்ய வேண்டிய நிர்பந்தமென்ன வந்தது?” என்றும் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
“நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கையிலும் தனிப்பெரு முதலாளிகளின் நலனையே முதன்மைப்படுத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது, வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா?, தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா?” என்றும் சீமான் அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பி உள்ளார்.
“இத்தொகையானது பல மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா பேரிடர் நிவாரண நிதியைவிட அதிகம் என்பதன் மூலம் முதலாளிகள் மீதான மத்திய அரசின் பாசத்தினையும், நாட்டு மக்கள் மீதான வஞ்சகப் போக்கையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தி உள்ளார்.