தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்” என்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

இன்றைய தினம் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக உள்ள காதி கிராஃப்ட் விற்பனை மையத்தில், காந்தியடிகளின் படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், அங்கு முதல் விற்பனையையும் அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே சுழற்சி முறை வகுப்புகள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும்” என்று, குறிப்பிட்டார்.

“பள்ளிக்கூடத்துக்கு வரும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடைமுறைகள் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து, கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் மேம்படுத்தப்படும்” என்றும், அவர் கூறினார்.

அத்துடன், “நவம்பர் 1 ஆம் தேதியன்று, ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுவரை வரை எந்த மாற்றமுமில்லை” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

அத்துடன், “ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியும், மருத்துவத்துறை வல்லுநர்களின் ஒப்புதலோடுதான் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது” என்றும், அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதனால், “திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ், உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக, “நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பள்ளி திறப்பை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதா?” என்று, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி என்றாலும், 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமுமில்லை” என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

“ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்காகப் பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன என்றும், அதே போல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படும்” என்றும், தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.