கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவது ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரும் 31 ஆம் தேதியுடன் 4 வது கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இதனால், மே 31 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதல் தளர்வுகள் அளிக்கலாமா? என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி தற்போது முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், மருத்துவ பரிசோதனை தொடர்பாக செயல்படுத்த வேண்டிய உத்திகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மருத்துவ சிகிச்சை வழிமுறைகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? என்பது குறித்த முக்கிய முடிவும் எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வுகள் முடிந்தபிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படுவது குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், தற்போது நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.
இதனிடையே, வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஆண்டு தோறும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளிகள் திறக்கப்படுவது இந்த அண்டு ஆகஸ்ட் மாதத்திற்குத் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தத் திட்டம் உள்ளதாகவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளைப் பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.