அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து
உள்ளார்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுமைக்கும் பொது
முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வையும், மற்ற பிற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வையும், ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அரசுப் பள்ளிகளில் நடைபெறவில்லை. ஆனால், சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.
அது போல், பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த சூழலில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இந்ந நிலையில், இந்த ஆண்டுக்கான அரையாண்டுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திக்கும் போது, இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது, இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது” என்று, தெரிவித்தார்.
அத்துடன், “தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம்” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும், “ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.
“கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றும், அதே சமயம் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அப்போது, “பள்ளிகள் உள்ள கழிப்பறை தொடர்பான பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், “பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாமல் இல்லை. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், கூடுதல் கழிப்பறைகள் பள்ளிகளுக்கு தேவைப்படுகின்றன. இந்த வசதிகள் படிப்படியாக கட்டிக்கொடுக்கப்படுகிறது” என்றும், குறிப்பிட்டார்.
முக்கியமாக, “பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலந்து ஆலோசித்த பிறகு முடிவுசெய்யப்படும்” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதேபோல், புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
அதன் படி, “அனைத்து வகுப்புகளும் ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும், அரை நாள் மட்டும் செயல்படும் பள்ளிகளுக்கு விருப்பப்படும் மாணவர்கள் வரலாம் என்றும், ஜனவரி 18 ஆம் தேதி முதல் முழுமையாக பள்ளிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றும், அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.