மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த வந்தபோது, அவருடன் இணைந்துகொண்ட

ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும், சசிகலா நேரில் அஞ்சலி செலுத்த வந்தபோது, கூடாரத்தை காலி செய்து எஸ்கேப் ஆன சம்பவம், அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான 80 வயதான மதுசூதனன், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று மாலை உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுசூதனனின் உடல் மருத்துவமனையில் இருந்து அதிகாலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதனால், அவரது உறவினர்கள் மரியாதை செலுத்திய பிறகு, பொது மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் செலுத்தி வருகின்றனர்.

அதன் படி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோருடன் அமர்ந்துகொண்டு, அவர்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் மதுசூதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, மதுசூதனன் உடலுக்கு அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சசிகலா, அஞ்சலி செலுத்த நேரில் வருகை தந்தார். அப்போது, மதுசூதனனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சசிகலா, அதன் தொடர்ச்சியாக மதுசூதனன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதே நேரத்தில், சசிகலா அஞ்சலி செலுத்த வந்த அந்த சமயத்தில், அது வரை அங்கிருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும், தங்களது கூடாரத்தை காலி செய்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால், சசிகலா அங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அது வரை அங்கிருந்த அதிமுக கூடாரமே கலியானதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு, அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடல், இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.