சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தமிழகம் உட்பட ஊரடங்கு உத்தரவு 4 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணிக்குத் திரும்பி உள்ளனர்.
இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயல்பு நிலை மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது. இதனால், சாலையில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்படத் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, வெளியே வரும் பொதுமக்கள் பலரும், முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக” குறிப்பிட்டார்.
மேலும், சென்னையில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதிப்பார்கள்” என்றும் அறிவுறுத்தினார்.
அதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சமூக கடைமையை உணர்ந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு வருகிறார். அப்போது, அண்ணா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறை முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறி வெளியே சுற்றிய 4,13,238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுவரை விதிமுறையை மீறிச் செயல்பட்டவர்களிடமிருந்து 6.87 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.