ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான பொருட்களைப் பெற மே 29 ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் உதவித்தொகையுடன் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசு அறிவிப்பின்படி அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில், “ஜூன் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் மே 29 ஆம் தேதி முதல் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் பழனிசாமி தற்போது அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தொடர்ந்து 29, 30, 31 ஆகிய 3 நாட்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும், அந்த டோக்கனில் பொருள் வழங்கப்படும் நேரம் மற்றும் நாள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “டோக்கன் வாங்க யாரும் கடைக்கு வர வேண்டாம் என்றும், அந்த டோக்கன் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த டோக்கனை வைத்து கொண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கி கொள்ளலாம்” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வந்து பெற்றுச் செல்ல வேண்டும் என்றும், அனைவரும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.