பிச்சை எடுத்து வந்த பெண்ணுக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு அத்தி பூத்தார்போல், சில நன்மைகளும் செய்துவிட்டு செல்வதுண்டு. அப்படியான ஒரு அதிசய நிகழ்வுதான், பிச்சை எடுத்து வந்த பெண்ணுக்கும் - கார் ஓட்டுநர் ஒருவருக்கும் நடைபெற்ற இந்த காதல் திருமணம்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும், சாலையோரம் வசிப்பவர்களுக்கும், தனி நபர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளும் பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன.
அதன்படி, கான்பூரில் லல்டா பிரசாத் என்ற செல்வந்தர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஏழைகளுக்குத் தொடர்ந்து உணவு வழங்கி வந்துள்ளார். பிரசாத் உடன், அவரது கார் ஓட்டுநர் அனில், பல்வேறு மக்களுக்கும் உணவு வழங்கி வந்தார்.
அப்படி உணவு வழங்கும் போது, நீர்சீர் என்ற பகுதியில் உள்ள சாலையோரம் பிச்சை எடுத்து வந்த நீலம் என்ற பெண்ணை, அனில் சந்தித்து உணவு வழங்கி உள்ளார்.
இவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகள் காதலாக பூத்து குலுங்கு, தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திருமணப் பந்தத்தில் முடிந்திருக்கிறது.
அனில் - நீலம் ஜோடியின் திருமணம், கான்பூரில் உள்ள புத்த ஆசிரமத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தில், ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
இந்த காதல் திருமணம் குறித்துப் பேசிய மணமகள் நீலம், “ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயுடன், தான் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். சகோதரனால் கைவிடப்பட்ட நிலையில், வேறு வழியின்றி பிச்சை எடுத்து வந்ததாகவும், உணவு வழங்குவதற்காகத் தனது முதலாளியுடன் வந்த அனில், குடும்பச் சூழல் குறித்து தன்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதாகவும்” கூறினார்.
மேலும், “பிச்சை எடுப்பதை விட்டு விட வேண்டும் என்று அனில், கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்த பிறகே, தனது காதலை அனில் வெளிப்படுத்தினார்” என்றும், வெட்கம் ததும்பப் பேசினார் நீலம்.
இதனிடையே, அனில் - நீலம் ஜோடியின் காதல் திருமணம், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கான்பூர் மக்களிடையே மிகப் பெரிய ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.