இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்திய குடியுரிமை சட்டத்தை கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்பாக, மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், இந்த சட்டத்திற்குத் தமிழகத்தைச் சேர்ந்த திமுக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரமாண்ட பேரணியும் நடத்தின.
அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் நாடெங்கும் புரட்சித் தீ பற்றி எரிந்தது.
அப்போது, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பின. அந்த சமயத்தில், தலைநகர் டெல்லியில் போராட்டத் தீ பற்றி எரிந்தது. ஆனால், போராட்ட தீயை அணைக்க வேண்டிய மத்திய அரசோ, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, புரட்சித் தீயை மேலும் பரப்பப் பார்த்தது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே டெல்லியில் கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசினார். அத்துடன், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காவலர் ரத்தன்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் வரிசையாக உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் 105 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால், தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டத்திலும், அதனால் ஏற்பட்ட வன்முறையிலும் ஒட்டு மொத்தமாக 54 பேர் கொல்லப்பட்டனர். 600 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 97 பேருக்கு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இப்படியாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குடியுரிமை திருத்த சட்டம், அந்த சூழலில் தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியது.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய தினம் “சிஏஏவுக்கு எதிராக” மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அதில், “மத்திய அரசு கடந்த 2019 ஆம் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராகவும், அகதிகளாக வருவோரை மத ரீதியாக பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
“சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரும் தனித் தீர்மானத்தை” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றைய தினம் கொண்டுவந்தார்.
“இந்திய குடியுரிமை சட்டம் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றி இருப்பதாகவும், அந்த சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும், அல்லது அந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தக் கூடிய தீர்மானம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அத்துடன், “இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தின்போது, இலங்கை தமிழர்கள் குறித்து ஒன்றிய அரசு கவலைப்படவில்லை என மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இதனால், சட்டப்பேரவையிலிருந்து இன்று அதிமுக வெளி நடப்பு செய்தது.
“சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாக” கூறி அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.
அதே போல், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்திலிருந்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.