மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக உள்துறை அமைச்சருக்கு திமுக கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக திமுக எம்.பி.க்கள் சார்பாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உள் துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அக்டோபர் 27-ம் தேதி இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் திமுக வலியுறுத்தி வருவதை, உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள். 7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, “மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக இருப்பதால் திமுக அமைதியாகவும் ஜனநாயகவழியிலும் அக்டோபர் 24, 2020 அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தியது” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே நீட் தேர்வு உண்டாக்கியிருக்கும் காயத்தோடு, தற்போது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்தவரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும். ஆகவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020'-க்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் டி.ஆர்.பாலு.
இந்தக் கடிதத்தைப் பகிர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் மயான அமைதி காத்துவருகிறார் முதல்வர். அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க் கட்சியான தி.மு.க. உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதலமைச்சர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார்” என விமர்சித்துள்ளார்.
கவுன்சிலிங் துவங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதாவையும் முதலமைச்சர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதல்வர் என்றும் கேள்வியையும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.