மழை பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையினர் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

வங்க‌க்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தாலும், இன்று பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சாலைகளில் மரங்கள் சரிந்து வீழாமல் இருப்பதற்காக கிளைகளை அகற்றி சீர் செய்யும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். மழை குறைந்த பிறகு இது குறித்த கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்படும் என அமைச்சர் ராமசந்திரன் கூறினார் .


அதனை தொடர்ந்து கனமழையின்போது பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் அவசர உதவிக்கு காவல்துறை 100, தீயணைப்புத் துறை 101, பொது எண் 112, அவசர ஊர்தி 108, காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-24343662, 044-24331074, 044-28447701, 044-28447703 (ஃபேக்ஸ்), சென்னை மாநகர காவல் பொதுமக்கள் குறை தீர்ப்பு பிரிவு எண் 044-23452380 மற்றும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எண். 044-23452359 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார் .

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய பேரிடர் மீட்பு படை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. மழை பாதித்த இடங்களில் அவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மழை குறைந்த பிறகு பாதிப்புகளை கணக்கீடு செய்து தேவைக்கேற்ப மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்.” என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.