பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதுபோல பாரம்பரியமிக்க சேவல் சண்டை நடத்தப்பட வேண்டும் என்று, சேவல் வளர்ப்பாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழக மண்ணிக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அதில் ஒன்று தான் விளையாட்டு. அதுவும், வீர விளையாட்டு.

தமிழ்நாடு வீரம் விளைந்த மண் என்று சொன்னால், அது மிகையாகாது.

தமிழ் மண்ணில் நமக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வைத்த, போட்டிகள் நடத்தியிருக்கிறார்கள். காலப்போக்கில், செல்லப் பிராணிகளுக்குப் பயிற்சி கொடுத்து, அவற்றை முறைப்படி நடத்தத் தொடங்கினார்கள். அப்படி வந்த விளையாட்டு கலைகள் தான்.. ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என அனைத்து விதமான விளையாட்டுகளும்.

தமிழ்நாட்டில் தான், விளையாட்டைக்கூடக் கலையாகப் பார்க்கும் விதம் இருப்பதாக விளையாட்டு விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், இன்று அந்த போக்குஇருக்கிறதா என்பது கேள்விக்குறி தான்.

இதனிடையே, தமிழ் மண்ணில் ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் போலவே, சேவல் சண்டை நடத்தப்பட்டு வந்தது. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே தமிழ்நாட்டில் உண்டு.

அப்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சேவல் சண்டையில் பிரச்சனை எழுந்தது. அதிக அளவிலான கூட்டம் கூடியது. இதனால், போலீசார் பாதுகாப்பு கொடுக்க முடியாமல், திணறிப்போனதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சேவல் சண்டை தொடர்பாகப் பகையும் வேரூன்றத் தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் நிறைய க்ரைம் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக, கடந்த 2014 ஆண்டு, சேவல் சண்டைக்குத் தமிழ் மண்ணில் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், தடையையும் மீறி சில இடங்களில் சேவல் சண்டைகள் நடப்பதுண்டு. சில இடங்களில் நீதிமன்ற அனுமதியோடு சேவல் சண்டைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படி, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலம்அனுமதி வாங்கி சேவல் சண்டை நடத்துவதால், அதிகப்படியான பணம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படுவதாக, சேவல் வளர்ப்பாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனால், மாவட்ட நிர்வாகமே நேரடியாகத் தலையிட்டு, பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதுபோல, பாரம்பரியமிக்க சேவல் சண்டையையும் நடத்த வேண்டும் என்று சேவல் வளர்ப்பாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.