பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
துக்ளக் இதழின் 50 ஆம் ஆண்டு விழா, கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வு குறித்தும், அப்போது தந்தை பெரியார் செய்த செயல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதற்குத் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக ரஜினிகாந்த் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டது.
அத்துடன், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
ஆனால், துக்ளக் விழாவில் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் கூறியது பொய்யான தகவல் என்றும், இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தந்தை பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, “பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து, சென்னை காவல் ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை கடந்த 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, கடந்த 7 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குவதாக, எழும்பூர் 2 வது பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தது.