கோடநாடு கொலை - கொள்ளை வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், அந்த வழக்கில் மர்மம் இன்னும் விலகாமல், பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்து தற்போது பார்க்கலாம்..

அதாவது, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் புகுந்து, அங்குள்ள காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோத்தகிரி போலீசார், “சயான், மனோஜ், மனோஜ் சாமி உட்பட மொத்தம் 10 பேரை அதிரடியாகக் கைது” செய்தனர்.

சந்தேகங்கள்

- இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் திடீரென்று சாலை விபத்தில் உயிரிழந்தார்.

- அதே போல் அந்த எஸ்டேட்டின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.

- அதன் தொடர்ச்சியாகக் குற்றவாளியான சயானின் குடும்பத்தினர் சென்ற கார் திடீரென்று விபத்தில் சிக்கிய நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

- இப்படியாக, கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து இறந்ததால், கோடநாடு கொலை - கொள்ளை வழக்கு மிகப் பெரும் சர்ச்சையாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- மேலும், கோத்தகிரி காவல் துறையினர் இதனை சாதாரண கொலை - கொள்ளை வழக்கு போல் விசாரித்து கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.

- பின்னர், “இந்த வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை எனவும், பல அதிமுக பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும்” சந்தேகங்கள் கிளம்பியது. பின்னர், இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

ஆட்சி மாற்றம்

- ஆனால், திமுக ஆட்சி அமைத்தவுடன் மீண்டும் கோடநாடு வழக்கு தூசி தட்டப்பட்டு மேல் விசாரணையைத் தொடங்கியது.

- இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது,

- கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கேள்விகள்

- கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில், காவல் ஆய்வாளர் பால சுந்தரத்திற்குத் தகவல் வருவதற்கு முன்பாகவே, அதாவது காலை 7.15 மணிக்கு தடயவியல் நிபுணர்களுக்குத் தகவல் கிடைத்தது எப்படி?

- இந்த கொள்ளை நடந்த இடத்திற்கு போலீசாருக்கு முன்பாகவே அவர்கள் விரைந்து சென்றது எப்படி?

- போலீசாருக்கு தாமதமாகத் தகவல் அளிக்கப்பட்டதற்கான என்ன காரணம்?

- கொடநாடு எஸ்டேட்டின் சம்மந்தப்பட்ட கேட் மற்றும் அந்த வாகனங்களைப் புகைப்படம் எடுத்ததாகக் கூறிய போலீசார், கொள்ளை நடந்த பகுதியில் ஏன் புகைப்படம் எடுக்கவில்லை?

- இந்த கொலை கொள்ளை சம்பவம் நடந்த போது, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் ஏன் பதிவாகவில்லை?

- கொலை கொள்ளை சம்பவம் நடந்த போது, அந்த நேரத்தில் எப்படி அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது?

- இந்த மின் தடை தொடர்பாக போலீசார் ஏன் முழுமையான விசாரணை நடத்தவில்லை?

- சிசிடிவி ஆப்ரேட்டரான தினேஷிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை?

- கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் உள்ளது இருந்தது? எந்தெந்த பொருட்கள் திருட்டுப் போனது என்பது பற்றி சசிகலா மற்றும் இளவரசிக்கு மட்டுமே தெரியும் நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தாமல் போனதற்கு என்ன காரணம்?

- கோடநாடு பங்களாவில் மொத்தம் 14 கேட் இருக்கும் நிலையில், கொள்ளை நடந்ததாகக் கூறப்பட்ட 3 கேட் மட்டும் ஆய்வு செய்து விசாரணை நடத்தியது ஏன்?

- இந்த கொலை - கொள்ளை சம்பவம் நடந்த போது, அன்றைய நாளில், அப்போதைய நேரத்தில் மிகவும் குறைந்த அளவிலான காவலாளிகள் மட்டுமே பணியில் இருந்தது எப்படி?

- குறைந்த அளவிலான காவலாளிகள் இருந்தது பற்றி ஏன் விசாரணை நடத்தவில்லை?

- அந்த பங்களாவில் வருகை பதிவேடு இருந்ததா? அதை ஏன் காவல்துறை கைப்பற்றி விசாரிக்கவில்லை?

- இப்படி ஒரு முக்கிய வழக்கை ஏன் போலீசார் மிகவும் அலட்சியமாக விசாரித்தனர்?

இப்படியாக, கோடநாடு கொலை - கொள்ளை சம்பவம் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளன.