பேஸ்புக் CEO மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளன. அத்துடன், பலரும் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.
இதனிடையே, பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதால், பலரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல், பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதால்; பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பயன்பாடு வழக்கத்தை விட தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 30 பில்லியன் டாலர்கள் அதாவது 2.5 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மார்ச் மாதம் வரை சுடார் 57.5 பில்லியன் டாலராக இருந்த மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, இந்த 2 மாத காலத்தில் 30 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, 87.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
வீட்டில் முடங்கி உள்ள மக்கள் சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வரும் இந்த சூழலில், பேஸ்புக் நிறுவனம் பல்வேறு அப்டேட்களையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, ஜூம் செயலிக்கு போட்டியாக, 50 பேர் வரை வீடியோ அழைப்பில் உரையாடும் மெசஞ்சர் ரூம்ஸ் வசதியையும், அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனிடையே, மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதால், தற்போது அவர் உலகின் 3 வது பெரிய பணக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதுபோல், உலகின் மிகப் பெரும் பணக்காரர் என்ற பட்டியலில் அமேசான் சி.இ.ஒ ஜெஃப் பேசோஸ், முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து, 2 வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.